

சென்னை: காதி, கைத்தறி துறை, அமெட் பல்கலைக்கழகம் சார்பில், பல்கலைக்கழக மாணவர்கள் மூலம்காதி துணி விற்பனையை தமிழக கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார். ரூ.1 கோடி என்ற இலக்கையும் தாண்டி மாணவர்கள் துணி வகைகளை விற்பனை செய்தனர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, `கை கொடுப்போம் காதிக்கும் கைத்தறிக்கும்' என்ற திட்டத்தை சென்னை கானாத்தூரில் அமைச்சர் ஆர்.காந்தி நேற்று தொடங்கிவைத்து பேசியதாவது:
பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் மூலம் ரூ.1 கோடி மதிப்பிலான கைத்தறி மற்றும் காதிப் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள், கிராமத் தொழில்களில் ஈடுபடுவோருக்கு துணை நின்று, அவர்களது துயர்துடைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, பெரிய சமூகத் தொண்டாகும்.
கோ-ஆப்டெக்ஸ் மற்றும் காதி பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்ய ஆன்லைன் விற்பனை, புதிய டிசைன், விளம்பரங்கள், கைபேசி செயலி அறிமுகம் மற்றும் காதியில் புதிய பொருட்கள் அறிமுகம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸில் இதுவரை இல்லாத அளவாக ரூ.155 கோடிக்கு விற்பனை நடந்தது. இந்த ஆண்டு இதுவரை ரூ.55 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
வரும் தீபாவளியை முன்னிட்டு ரூ.165 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயித்துள்ளோம். தீபாவளிக்காக 500 புதிய டிசைனில் துணிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டு காதி, கிராமத் தொழில் வாரியத்தில் விற்பனை ரூ.46 கோடி. இந்த ஆண்டு இலக்கு ரூ.60 கோடி.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், அமெட் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் நாசே ஜெ.ராமச்சந்திரன், துணைவேந்தர் கர்னல் க.திருவாசகம், துணி நூல், கதர் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறிதுறை ஆணையர் டி.பி.ராஜேஷ், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் பொ.சங்கர், செங்கல்பட்டு சார் ஆட்சியர் சஞ்சீவனா பங்கேற்றனர்.
சென்னை கானாத்தூரில் உள்ள அமெட் பல்கலைக்கழக மாணவர்கள் 4,000 பேர், காதி, கைத்தறிதுணி வகைகள், பொருட்களை தோளில் சுமந்து சென்று, வீடு வீடாக விற்பனை செய்தனர். நேற்று ஒரேநாளில் ரூ.1 கோடிக்கும் மேற்பட்ட துணிகளை மாணவர்கள் விற்றனர். அவர்களின் தன்னார்வத்தை பாராட்டியும், ஊக்கப்படுத்தவும், 30% தள்ளுபடியுடன் கூடுதலாக காதி, கைத்தறி துணிகளுக்கு 5% தள்ளுபடி அளிக்கப்படுவதாக துறை செயலர் தர்மேந்திர பிரதாப் கூறினார்.