

தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து கடந்த 28-ம் தேதி எப்.ரைமண்ட் என்பவருக்கு சொந்தமான ‘எஸ்தர் ராஜாத்தி (டிடிஎன் 220)' என்ற தோணி, சுமார் 250 டன் அளவில் கட்டுமான பொருட்கள் மற்றும் காய்கறி போன்ற சரக்குகளை ஏற்றிக் கொண்டு மாலத்தீவு புறப்பட்டுச் சென்றது. இந்த தோணியில் தூத்துக்குடியைச் சேர்ந்த 7 மாலுமிகள் இருந்தனர்.
தோணி நேற்று முன்தினம் அதிகாலையில் மாலத்தீவு அருகே சுமார் 60 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது, சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியது. அந்த வழியாக மாலத்தீவு நோக்கி வந்து கொண்டிருந்த எம்.வி.பரத்வாஜ் என்ற சரக்கு கப்பலில் இருந்தவர்கள், கடலில் தத்தளித்த 7 மாலுமிகளையும் மீட்க முயற்சி செய்தனர்.
அப்போது தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டான்லி (59) என்ற மாலுமி மட்டும் கடலில் மாயமானார். மற்ற 6 மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர் ஸ்டான்லியின் சடலம் மீட்கப்பட்டது. 6 பேரும் மாலத்தீவு அழைத்து செல்லப்பட்டனர். ஸ்டான்லி உடல் மாலத்தீவு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 6 பேரை தூத்துக்குடிக்கு அழைத்து வரவும், ஸ்டான்லி உடலை கொண்டுவரவும் மாலத்தீவு தமிழ்ச்சங்கம் உதவியோடு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.