Published : 03 Oct 2022 06:42 AM
Last Updated : 03 Oct 2022 06:42 AM

கேரள பல்கலை.யில் இளங்கோவடிகளுக்கு இருக்கை: தமிழக முதல்வரிடம் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் கோரிக்கை

திருவனந்தபுரம்: கேரளப் பல்கலைக்கழகத்தில் இளங்கோவடிகளுக்கு இருக்கை,திருவனந்தபுரத்தில் மனோன்மணீயம் சுந்தரனாருக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக முதல்வரிடம் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில மாநாட்டில் கலந்துகொள்ளதிருவனந்தபுரம் வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சு.முருகன், செயலாளர் சி.கண்ணன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சங்க கால தமிழ்ப் புலவர்களுள் 50-க்கும் அதிகமானோர் சேர நாட்டைச் (தற்போதைய கேரளம்) சேர்ந்தவர்கள்.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான ‘பதிற்றுப்பத்து' சேரநாட்டில் எழுந்தது. நாயன்மார்களில் சேரமான் பெருமாள் நாயனார், ஆழ்வார்களில் குலசேகர ஆழ்வார், சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள் ஆகியோரும் சேர நாட்டினர். பிற்காலத்தில், தமிழின் மிகச்சிறந்த கவிதை நாடகமான மனோன்மணீயம் தந்த பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, தமிழ் படைப்புகளுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற நீல.பத்மநாபன், ஆ.மாதவன் ஆகியோரும் சேர நாட்டினர். தமிழ் இலக்கியத்துக்கு பெரும்நன்கொடையாகிய சிலப்பதிகாரத்தை படைத்த இளங்கோவடிகளின் பெயரில் கேரளத்தில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை அமைய வேண்டும் என்பது கேரளம்வாழ் தமிழர்களின் நீண்டகால ஆசை. திராவிட மொழிகளின், குறிப்பாக தமிழ் - மலையாள மொழிகளின் ஒப்பாய்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இந்த இருக்கை அமைய வேண்டும்.

இதுகுறித்து திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். கேரள அரசின் ஆணைப்படி கேரளப் பல்கலைக்கழகம் இக்கோரிக்கையை ஆய்வுசெய்து, ரூ.2.5 கோடி நிரந்தர வைப்புத்தொகையாக வழங்கினால் உடனடியாக ‘இளங்கோ இருக்கை' அமைக்கலாம் என கடிதம் அனுப்பியுள்ளது. கேரள மாநிலத்தில் தமிழ் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் இக்கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் ஆசிரியர் மனோன்மணீயம் பெ.சுந்தரனாருக்கு அவர் வாழ்ந்த திருவனந்தபுரம் நகரில் மணிமண்டபம் அமைக்க, தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறோம். கேரள அரசிடம் நிலம் ஒதுக்கக் கேட்டு, அந்நிலத்தில் தமிழக அரசின் செலவில் இம்மணிமண்டபம் அமைத்தால் சிறப்பாக இருக்கும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x