

பொள்ளாச்சி: அருட்செல்வர் நா.மகாலிங்கத்தின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அவரது நினைவாலயத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி பொள்ளாச்சியில் நடைபெற்றது.
சக்தி குழுமத்தின் நிறுவனரும், தொழிலதிபருமான நா.மகாலிங்கம் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி மறைந்தார். சக்தி குழுமத்தின் சார்பில் நா.மகாலிங்கத்தின் எட்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பொள்ளாச்சியில் என்ஐஏ கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அருட்செல்வர் நா.மகாலிங்கத்தின் நினைவாலயம் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது .
இந்நிகழ்வில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், பழநி மடம் சாது சண்முக அடிகளார், குமரகுரு பொறியியல் கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.மாணிக்கம், துணைத் தலைவர் எம். பாலசுப்பிரமணியம், சாமுண்டீஸ்வரி சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் எம்.சீனிவாசன், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம், குமரகுரு கல்வி நிறுவனங்களின் துணைத் தாளாளர் சங்கர் வானவராயர், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்மாநில தலைவர் ஆர்.வி.எஸ்.மாரிமுத்து, சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், வேதநாயகம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் கந்தசாமி மற்றும் நா.மகாலிங்கத்தின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
என்ஐஏ கல்வி வளாகத்தின் ஒரு பகுதியில், வடலூர் வள்ளலார் வழிபாட்டுத்தல வடிவமைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தின் உள்ளே, அணையா மின்விளக்கு மற்றும்2 அணையா ஜோதி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ராமலிங்க அடிகளாரின் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை எனும் பாடல் இடைவிடாமல் ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பழநி வெங்கடேஷ் குழுவினரின் திருமுறை பன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.