

திருப்பூர்/உடுமலை / உதகை: காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள 265 ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் 7,848 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருப்பூர் மாவட்டம் காங்கயம்வட்டம் பழைய கோட்டை ஊராட்சி கண்ணியங்கிணறு சமுதாயநலக்கூட வளாகத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் எம்.மீனாட்சி தலைமையில் நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. அரசு பற்றாளராக காங்கயம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் சரவணக்குமார் பங்கேற்றார்.
பழையகோட்டைபுதூர் ஊராட்சிஒன்றிய நடுநிலைப் பள்ளி குழந்தைகளின் கல்வி தரம் உயர ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பழையகோட்டை கிராமத்தைச் சேர்ந்த வெங்கரையாம்பாளையம், நல்லம்மாள்புரம், சேமலைவலசு, இச்சிக்காட்டுவலசு, கஸ்பா பழையகோட்டை, ஊஞ்சமரம், கண்ணியங்கிணறு ஆகிய ஊர்களை சேர்ந்த குழந்தைகள், ஒன்பதாம் வகுப்பில் சேர்வதற்கு 6 கிலோ மீட்டருக்கு மேல் செல்ல வேண்டி இருப்பதால், பழையகோட்டைபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம்,காங்கயம் உட்பட 13 ஒன்றியங்களுக்குட்பட்ட 265 ஊராட்சிகளில், சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நேற்று நடைபெற்றன. வரவு - செலவு விவரம், தணிக்கை அறிக்கை, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் உள்ளிட்ட தீர்மானங்கள் மக்களின் விவாதத்துக்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தாராபுரம் அருகே கோவிந்தாபுரம் ஊராட்சி கிராமசபைக் கூட்டத்தில் பார்வையாளராக பங்கேற்றுஆட்சியர் எஸ்.வினீத் பேசும்போது,"ஊராட்சிகளின் வரவு- செலவு கணக்குகள், புதிதாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் ஆகியவை குறித்து மக்களின் பார்வைக்காக வைக்கப்பட வேண்டும்.
ஊராட்சியின் பொது நிதி, செலவினம் குறித்து மக்கள் விவாதிக்க வேண்டும். ஒவ்வொருவரும் வீட்டை போலவே சுற்றுப்புறத்தையும், கிராமத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார். அப்போது, மூத்த தூய்மைகாவலர் ஒருவருக்கு அவரது பணியைபாராட்டி சால்வை அணிவித்தார். பல்லடம் ஒன்றியத்துக்குட்பட்ட கோடாங்கிபாளையம், கரைப்புதூர் கிராமசபைக் கூட்டங்களில் மாவட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) என்.ஏ.மதுமிதா கலந்துகொண்டார். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, "திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள 265 ஊராட்சிகளிலும் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் 7,848 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்றார்.
எப்பநாடு ஊராட்சியில்... உதகை ஊராட்சி ஒன்றியம் எப்பநாடு ஊராட்சி சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் பங்கேற்று, காந்தியடிகளின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்தும்,கிராம ஊராட்சியின் தணிக்கை, ஊரகப் பகுதியில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தஎடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
எப்பநாடு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்து, பல்வேறு துறைகளின் மூலமாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை பார்வையிட்டார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மக்களைதேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், பயனாளி ஒருவருக்கு மருத்துவ பெட்டகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 3 குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் (பொ) ஷிபிலா மேரி, உதகை ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் (பொ) ஷோபனா, எப்பநாடு ஊராட்சி தலைவர் சிவக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.