Published : 03 Oct 2022 06:29 AM
Last Updated : 03 Oct 2022 06:29 AM

நாமக்கல் | அரசுப் பேருந்துகளில் மதிப்பதில்லை; மகளிருக்கு இலவச பேருந்து வேண்டாம்: கிராம சபைக் கூட்டத்தில் பெண் வேதனை

திருச்செங்கோடு தாலுகா மங்களம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

நாமக்கல்: அரசுப் பேருந்தில் இலவச பயணம் என்பதால் பெண்களை மதிக்காமல் ஓட்டுநரும், நடத்துநரும் அவமானப்படுத்துகின்றனர். பெண்களுக்கு இலவச பேருந்து வேண்டாம் என கிராம சபைக் கூட்டத்தில் பெண் வேதனையுடன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மங்களம் ஊராட்சி செட்டிபாளையத்தில் கிராம சபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர் குப்பாயி தலைமையில் நடைபெற்றது.

திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் மங்களம் நத்தமேடு பகுதியைச் சேர்ந்த தமிழ்ச் செல்வி பேசியதாவது: நாங்கள் மருத்துவமனைக்கு வருவதாக இருந்தால் நீண்ட தூரம் வர வேண்டியது உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லை. செவிலியர் மட்டுமே இருக்கிறார். நடமாடும் மருத்துவமனை எப்போது வருகிறது என்பது எங்களுக்கு தெரிவதில்லை.

அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும்போது, இலவச பயணம் என்பதால் ஓட்டுநரும், நடத்துநரும் பெண்களை மதிக்காமல் அவமானப்படுத்துகின்றனர். பெண்களுக்கு இலவச பேருந்து வேண்டாம். நாங்கள் டிக்கெட் கூட எடுத்து விடுகிறோம். கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இவரது பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்கண்ணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x