

சென்னை: சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கேன்கள் மூலம் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, டான்ஸ்டியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சிறுமற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் க.மாரியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கேன்கள் மூலமாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யக் கூடாது என காவல்துறை டிஜிபி அண்மையில் ஆணைபிறப்பித்துள்ளார். தற்போது நிலவிவரும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளுக்காக இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் டீசலைப் பயன்படுத்தி செயல்படும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பல மாவட்டங்களில் செயல்படும் ஆயிரக்கணக்கான சிறுமற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கிராமப் பகுதிகளில் விவசாய பயன்பாட்டுக்காக வழங்கப்படும் 6 மணி நேர மின்சாரத்தை மட்டுமே பெற முடியும். மற்ற நேரங்களில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் டீசல் என்ஜின் அல்லது டீசல் ஜெனரேட்டர்கள் மூலம்தான் இயந்திரங்களை இயக்க வேண்டி உள்ளது. எனவே, சிறு மற்றும் குறுந்தொழில் நடத்துவோரின் உதயம்பதிவு எண் சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு அல்லது மாவட்டஆட்சியர் அலுவலகம் மூலமாகவோ, மாவட்ட தொழில் மைய அலுவலகத்தின் மூலமாகவோ ஆய்வு செய்து சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் செயல்படும் இடத்தின் மூலமாக தேவைப்படும் டீசலை வாங்குவதற்கு தமிழக முதல்வர் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மாரியப்பன் தெரிவித்துள்ளார்.