

சென்னை: காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வாங்க கூட்டம் அலைமோதியது. புரட்டாசி மாதம் காரணமாக கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் காசிமேடு மீன்சந்தையில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால், மீன்களின் விலையும் குறைந்திருந்தது. பெரும்பாலானோர் 2-வது சனிக்கிழமையுடன் புரட்டாசி விரதத்தை முடித்துவிட்டனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை முதலே காசிமேடு மீன்சந்தைக்கு ஏராளமானோர் மீன்களை வாங்க வந்தனர். விசைப் படகுகளில் கடலுக்குசென்று திரும்பிய மீனவர்கள், வஞ்சிரம், வவ்வால், ஷீலா, சங்கரா, பால் சுறா, தோல்பாறை உள்ளிட்ட மீன்களை அதிக அளவு பிடித்து வந்தனர். இதனால், பெரிய மீன்கள்அதிகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கூட்டம் அதிகமாக இருந்ததால் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1,300 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்டது. வவ்வால் ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.1,000, சங்கராரூ.400 முதல் ரூ.800, தோல் பாறைரூ.350 முதல் ரூ.600 என்ற விலையிலும் இறால் மற்றும் நண்டு ஒரு கிலோ ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.