Published : 03 Oct 2022 07:29 AM
Last Updated : 03 Oct 2022 07:29 AM
சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தில் கடந்தஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் அரையாண்டில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் மூலம் ரூ.480 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தில் 9 லட்சத்து 91 ஆயிரம் நுகர்வோர் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றுள்ளனர். இவர்களிடம் இருந்து ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டு கட்டணமும், அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை 2-வது அரையாண்டு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.480 கோடி கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கடந்த 2021-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் ரூ.372 கோடிக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்தஆண்டின் முதல் அரையாண்டில் ரூ.480 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் முதல் அரையாண்டில் கிடைத்த வருவாயைவிட 29 சதவீதம் அதிகம். சொத்து வரி உயர்ந்துள்ள நிலையில், குடிநீர் வாரிய கட்டணங்களும் உயர்ந்ததால் வருவாய் அதிகரித்துள்ளது.
30 சிறப்பு அதிகாரிகள்: வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு களப்பணிகளை கண்காணிப்பதற்காக சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் 15 மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் 15 செயற்பொறியாளர்கள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் பருவமழை காலங்களில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை கண்காணிப்பதோடு, மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்வர். பொதுமக்கள், தங்கள் பகுதியில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான குறைகளை சிறப்பு அலுவலர்களை தொடர்புகொண்டு நிவர்த்தி செய்துகொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT