

காஞ்சிபுரம்: பரந்தூரில் புதிதாக அமைக்கப்பட உள்ள புதிய விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டாம் என அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையை மக்கள் நிராகரித்தனர். பின்னர் கிராம மக்கள் அம்பேத்கர் சிலையிடம் கோரிக்கை மனு அளித்து நூதன எதிர்ப்பை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, பெரும்புதூர் வட்டத்தில் உள்ள ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதில், விமான நிலையத்துக்காக ஏகனாபுரம் கிராமத்தில் அனைத்து நிலங்களையும் மொத்தமாக கையப்படுத்துவதால், விவசாயிகள் தங்களின் விளைநிலங்களை அனைத்தையும் மொத்தமாக இழக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், 600-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இதனால், புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் கிராம மக்கள் 67-வது நாளாக நேற்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், காந்தி ஜெயந்தியையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக ஏகனாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் கோபிநாத், பெரும்புதூர் வட்டாட்சியர் ஜெகன்நாதன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், புதிய விமான நிலையத்துக்காக குடியிருப்புகள், விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளை கையகப்படுத்துவதால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. அதனால், விமான நிலைய திட்டத்தை எதிர்ப்பதாக கிராம சபைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானத்தை மக்கள் நிறைவேற்றினர்.
முன்னதாக, மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டாம் என அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்து புறபட்டுச் சென்றனர். பின்னர், ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி முக்கிய சாலையில் ஊர்வலமாகச் சென்று, ஊர் எல்லையில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். இதேபோல், பரந்தூர் கிராமத்திலும் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.