Published : 03 Oct 2022 06:25 AM
Last Updated : 03 Oct 2022 06:25 AM

சென்னை மாநகராட்சி, மெட்ரோ ரயில் உள்ளிட்டவை சார்பில் ஒரே நேரத்தில் சாலைகளை தோண்டுவதால் கடும் போக்குவரத்து நெரிசல்: குழந்தைகள், கால்நடைகள், வாகனங்கள் பள்ளங்களில் விழும் அபாயம்

சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் கழிவுநீர் தேக்கத்திலேயே மழைநீர் வடிகால் கான்கிரீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். படம்: ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னையில் பெரும்பாலான இடங்களில் மாநகராட்சி, மெட்ரோ ரயில், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் மின் துறை சார்பில் கடந்த சில மாதங்களாக சாலைகள் தோண்டப்பட்டு வருவதால், அவற்றின் அகலம் குறுகி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் கடந்த 2015-ம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டபோது, மாநகராட்சி பராமரிப்பில் சுமார் 1,300 கிமீ நீள மழைநீர் வடிகால் இருந்தது. இப்போது 2 ஆயிரத்து 71 கிமீ ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாநகர வெள்ளத்துக்கு மழைநீர் வடிகால் தீர்வாகாது என அனுபவம் வாய்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் அரசும், மாநகராட்சி நிர்வாகமும், சென்னை வெள்ளத்தைச் சமாளிக்க மழைநீர் வடிகால் மட்டுமே தீர்வு என முடிவெடுத்து பல ஆயிரம் கோடிகளைக் கொட்டி மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால்களாக கட்டி வருகிறது.

அவ்வாறு பல 100 கோடிகளைச் செலவழித்து, மாநகருக்கே முன்மாதிரியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தியாகராயநகர் பகுதியில் மழைநீர் வடிகால்களைக் கட்டிய நிலையிலும், சுமார் 5 செமீ மழைக்கே கடந்த ஆண்டு அப்பகுதி வெள்ளத்தில் மிதந்தது. மழைநீர் வடிகால்கள் அதிகரித்த நிலையில், சிறு மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளக் காடாக மாறுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. தற்போது மாநகராட்சி முழுவதும் பெரும்பாலான சாலைகளில் வடிகால் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்கு நடுவே 3 வழித்தடங்களில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ளவும் அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அப்பணிகளுக்காகவும் சாலைகள் குறுகிவிட்டன. அப்பணிகளுக்காக பெரும் பள்ளங்களும் தோண்டப்பட்டு வருகின்றன. மேலும் மின் வாரியம், தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு சாலைகளைத் தோண்டி வருகின்றன.

குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு சில ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை, நகராட்சி நிர்வாகத் துறையின் அழுத்தத்தால் பிடிவாதமாக ஒரு சில மாதங்களில் முடிக்க மாநகராட்சி முயன்று வருகிறது. அதனால் மாநகரின் பெரும்பாலான சாலைகள் தோண்டப்பட்டு பெயர்ந்து கிடக்கின்றன. மாநகராட்சியின் அவசரத்துக்கு ஒப்பந்ததாரர்களால் ஈடுகொடுக்க முடியாமல், பல இடங்களில் பள்ளம்தோண்டப்பட்டு பணிகள் நடைபெறாமலும் பள்ளங்களாகவும், நீட்டிய கம்பிகளாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காட்சியளிக்கின்றன. இந்த பள்ளங்களைச் சுற்றி போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத நிலையில் அவற்றில் இரு சக்கர வாகனங்கள், லாரிகள், கார்கள் போன்றவை கவிழ்ந்து விபத்துகள் ஏற்படுகின்றன. நேற்று கேகே நகர் பகுதியில் மழைநீர் வடிகாலுக்கு வெட்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டு உயிர் தப்பியது.

நெரிசலும், எரிபொருள் செலவும்: இப்படி பல்வேறு துறைகளில் பணிகளால் மாநகரின் பெரும்பாலான சாலைகள் குறுகி கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகச் சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், பள்ளம் தோண்டப்பட்ட பகுதிகளில் மண்ணை முறையாக அகற்றாததால் அந்த சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில்,இதுபோன்ற போக்குவரத்து நெரிசல்களால் எரிபொருள்களுக்கான செலவு அதிகரிப்பதாலும், சாலையில் கிடக்கும் மண்ணாலும், வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுவால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கழிவுநீரில் கட்டுமானம்: ஒரு கட்டுமானம் உறுதியாக இருக்க வேண்டுமெனில் அதன் மீது குடிக்க உகந்த நீரை ஊற்ற வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த அவசரகதி மழைநீர் வடிகால் கான்கிரீட் போடும் பணிகள் கழிவுநீர் தேக்கங்களின் நடுவேதான் நடைபெறுகின்றன. இதனால் அந்த கட்டுமானங்கள் உறுதித்தன்மையை இழக்கும் என்று தெரிந்தும் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக அப்பணிகளை மேற்கொள்வதாகப் புகார் எழுந்துள்ளது.

வெள்ளம் வராத இடங்கள்: தண்டையார்பேட்டை மண்டலம் 36-வது வார்டு கொடுங்கையூர் எம்ஆர்.நகர், 37-வது வார்டு வியாசர்பாடி, விவேகானந்தா வித்யாலயா பள்ளி சாலை போன்றவற்றில் கடந்த 2015-ம் ஆண்டு வெள்ளம் சூழவே இல்லை. அவை சரிவான சாலை அமைப்பைக் கொண்டுள்ளன. இருப்பினும் இப்பகுதிகளில் தேவையின்றி மழைநீர் வடிகால்களைக் கட்டி, மக்கள் வரிப்பணத்தை மாநகராட்சி வீணடிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சுற்றுச்சூழல் விதிமீறல்: கிழக்கு கடற்கரைச் சாலையில் கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை கடலோரப் பகுதியில் மழைநீர் வடிகால்கள் அமைக்கக் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, பணிகள் தொடங்குவதற்கு முன்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். இது தெரிந்தே மாநகராட்சி நிர்வாகம் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதில் பசுமை தீர்ப்பாயம் தலையிட்டு, இப்பணிக்குச் சுற்றுச்சூழல் முன் அனுமதி கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த 2015-ம்ஆண்டு வெள்ளம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், மக்கள் எதிர்ப்பையும் மீறி, மாநகராட்சி நிர்வாகம் பணிகளைச் செய்து வருவதாகவும், இது மக்கள் வரிப்பணத்தை சூறையாடும் திட்டம் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோன்ற மாபெரும் மழைநீர்வடிகால் பணிகளை மேற்கொள்வதால் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும், அதைத் தடுக்கும் திட்டங்கள் என்ன என்பது குறித்து முன்கூட்டியே தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும்.

தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும்: மேலும் மாநகராட்சி மற்றும் இதரதுறைகள் சாலைகளை ஒரே நேரத்தில் தோண்டுவதால் சாலைகள் சுருங்கும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதைத் தீர்க்கும் வழிகள் தொடர்பாகவும் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். இவை அனைத்தையும் செய்யாமலேயே மாநகராட்சி நிர்வாகம் ஒரே நேரத்தில் மாபெரும் பணிகளை அனுமதித்து, மக்களை வதைத்து வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அனைத்து பணிகளையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், பணிகள் மேலும் வேகமெடுத்துள்ளதால், பொதுமக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றிடம் கேட்டபோது, யாரும் பதில் அளிக்கத் தயாராக இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x