

சென்னை: போதைப் பொருள் இல்லா தமிழகத்துக்கான ‘இரவு மாரத்தான்’ ஓட்டம் ஆவடியில் நேற்று இரவு நடைபெற்றது. இதை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இதில், பல பல மாநிலங்களைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். சென்னை ரன்னர்ஸ், வேல் டெக், வேலம்மாள் நெக்சஸ் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் இணைந்து மக்களிடையே உடற்தகுதி மற்றும் நல்ல ஆரோக்கியத்தை வளர்ப்பதை நோக்கமாக வைத்து ‘போதைப் பொருள் இல்லா தமிழகத்துக்கான ஓட்டம்’என்ற பெயரில் ‘இரவு மாரத்தான்’ ஓட்டத்தை நேற்று இரவு நடத்தியது. 21 கி.மீட்டர், 10 கி.மீட்டர், 5 கி.மீட்டர் தூரம் என தனித்தனியாக மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
ஆவடி, வேல்டெக் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி வளாகத்திலிருந்து மாரத்தான் ஓட்டம் துவங்கியது. இதை தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இந்த ஓட்டத்தில் தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், பிஹார், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், அந்தமான் நிக்கோபாரைச் சேர்ந்தவர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர். மொத்தம் 3,500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று ஓடினர். ஆவடி, வேல் நகரில் உள்ள 400 அடி (வெளிவட்ட சாலை) வழியாக இரவு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும், முழுமையாக பந்தயத்தை முடித்தவர்களுக்கும் பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் காவல் ஆணையர் விஜயகுமாரி, தலைமையிடத்து துணைஆணையர் உமையாள், போக்குவரத்துப் பிரிவு துணை ஆணையர் அசோக்குமார், குற்றப் பிரிவு துணை ஆணையர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.