Published : 03 Oct 2022 06:09 AM
Last Updated : 03 Oct 2022 06:09 AM

தீபாவளி பண்டிகையை ஒளி மயமாக்க சிவகாசியில் வண்ண வண்ண புதிய ரக பட்டாசுகள் அறிமுகம்

சிவகாசியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிரெய்ன், கிரிக்கெட் பந்து சக்கரம், கரோனா, பத்து தலை ராவணன் பட்டாசுகள்.

சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளியை அழகாக்க வண்ண மயமான புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கைவண்ணத்தில் தயாராகும் பட்டாசுகள், நாட்டின் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்கின்றன. சில ஆண்டுகளாக பட்டாசுகளுக்கு மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, விலை உயர்வு, சீனப் பட்டாசுகளின் வருகை, சுற்றுச்சூழல் விதிகளில் கட்டுப்பாடு, உச்ச நீதிமன்ற விதிமுறைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தாலும், ஆண்டுதோறும் புதிய ரக பட்டாசுகளை அறிமுகம் செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சரவெடி தயாரிக்கத் தடை உள்ளதால், சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் இந்த ஆண்டு புஸ்வாணம் போன்று தீப் பொறி எழுப்பும் பட்டாசுகளில் புதிய ரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர். 300 அடி உயரம் மேலே சென்று வெடித்து வர்ணஜாலம் நிகழ்த்தும்பேன்சி ரக பட்டாசுகளும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. சிறுவர்கள் கையில் நெருப்பு சுடாத வகையில் வண்ணமயமான பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை ரூ.100 முதல் ரூ.400 வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளன. பட்டாசு மூலப்பொருட்களான அலுமினிய பவுடர், சிகப்பு உப்பு, வெடி உப்பு, சல்பர் போன்ற மூலப்பொருட்களின் விலையேற்றம், அட்டைப்பெட்டி, காகிதங்கள் விலை உயர்வால் இந்த ஆண்டு பட்டாசு விலை 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.

புதிய பட்டாசுகள் விவரம்: வாட்டர் குயின்: புஸ்வாணம் போன்று 10 அடி உயரத்துக்கு தீப்பொறி எழும்பி நீர்வீழ்ச்சி போல ஒளியை உமிழும்.

ஜாலி பாபி: சரவெடி போன்றே தீயை பற்ற வைத்தவுடன் 10 அடி உயரம் தீப் பொறி மேலெழுந்து வெடித்து சிதறும்.

கைகளில் சக்கரம்: தரையில் சுற்றும் சங்குச் சக்கரத்தை கையில் பிடித்தபடியே வெடிக்கலாம். வட்ட வடிவில் தீப்பொறி பறக்கும்.

பனை ஓலை வெடி: ஆரம்பகால கட்டத்தில் பனை ஓலையை பயன்படுத்தி பட்டாசு தயாரித்தனர். தற்போது பனை ஓலை வடிவில் உள்ள அட்டையில் தயாரிக்கப்பட்ட வெடியை பற்ற வைத்தவுடன் கலர் காகிதங்கள் பறக்கும்.

புல்லட் துப்பாக்கி: மிஷின் துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் சீறுவதை போல, தீப்பொறி வெளியே வரும்.

சூரிய உதயம்: இந்த வெடியை பற்ற வைத்தால் சிதறும் தீப்பொறி சூரியன் உதயமாவது போன்ற காட்சி அளிக்கும்.

கிரிக்கெட் பந்து சக்கரம்: இந்த பட்டாசை பற்ற வைத்தால் 6 சக்கரங்கள் வெளியேறி தீப்பொறியை சிதறடிக்கும்.

அதேபோல, வெடித்த உடன் மேலே சென்று சுற்றிக்கொண்டே கீழே வரும் ஹெலிகாப்டர் பட்டாசு, ஜாலி டிரெயின் பட்டாசு, மோனோ டிரை கலர் பட்டாசு, ட்வெண்ட்டி ட்வெண்ட்டி மத்தாப்பு, 10 தலை ராவணன் பட்டாசு, ஆப்பிள் ஸ்மைலிமத்தாப்பு, ஏலியன் பட்டாசு, அர்ஜுன் டேங்க் பட்டாசு, சோட்டா பீம் லட்டு பட்டாசு என பல புதிய ரக பட்டாசுகள் வந்துள்ளன. இவை ரூ.50 முதல் ரூ.350 வரை விலையில் விற்கப்படுகின்றன.

அதோடு, கடந்த 2 ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திய கரோனா வைரஸ் பெயரிலும் பட்டாசு வந்துள்ளது. அதை பற்ற வைத்தவுடன் படபடவென வெடித்துச் சிதறும். ரூ.215 விலையில் இது விற்கப்படுகிறது. இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமை யாளர் ஒருவர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவு, பேரியம் நைட்ரேட்டுக்கு தடை உள்ளிட்ட காரணங்களால், சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் நெருக்கடியை சந்தித்துள்ளனர். பல தடைகளை தாண்டி மக்களை மகிழ்விக்கும் வகையில் புதிய ரக கலர்புல் பட்டாசுகளை தொழிலாளர் கள் தயாரித்துள்ளனர் என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x