

ஆம்பூர்: ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ் சாலையில் விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரை மீட்க சென்ற லாரி ஓட்டுநர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் பொய்கை பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் வினோத்குமார் (35). இவர், நேற்று முன்தினம் அதிகாலை ஆம்பூர் அடுத்த சீனிவாசபுரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தனது ஆட்டோவில் சென்றார். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ தாறுமாறாக ஓடி அங்குள்ள தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில், ஆட்டோவில் சிக்கிக் கொண்ட வினோத்குமார் வெளியே வர முடியாமல் கூச்ச லிட்டார். அப்போது, அவ் வழியாக ஓசூருக்கு கோழி தீவனம் ஏற்றிய லாரியில் காட்பாடி அடுத்த மேல்மாயில் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சரவணன் (35), அவரது சகோதரர் சுந்தரமூர்த்தி (33) ஆகியோர் சென்றனர். விபத்தில் ஆட்டோ சிக்கியதை கண்டதும், சரவணன் தனது லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு விபத்தில் சிக்கிய வரை மீட்க தனது சகோதரர் சுந்தரமூர்த்தியுடன் சென்றார். அதேநேரத்தில், அவ் வழியாக தி.மலை மாவட்டம் ஆரணி வட்டம் லாடவரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜா (26), மற்றொரு லாரி ஓட்டுநரான தவகிருஷ்ணன் (25), ஆகியோரும் தங்களது லாரிகளை தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநர் வினோத்குமாரை மீட்கச்சென்றனர். அதேபோல, அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஆம்பூரைச் சேர்ந்த சீனிவாசன்(35) என்பவரும் உதவிக்கு சென்றார்.
ஆட்டோவில் சிக்கிய வினோத் குமாரை, 5 பேரும் காப்பாற்ற முயற்சி மேற்கொண்டிருந்தபோது வேலூரில் இருந்து பெங்களூரு நோக்கி இரும்பு லோடு ஏற்றிய லாரி ஒன்று அதிவேமாக வந்து விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரை மீட்க முயன்ற 5 பேர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர்களான ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தனர். சுந்தரமூர்த்தி, சீனிவாசன், தவகிருஷ்ணன் ஆகியோர் படு காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந் ததும் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத்குமார் உட்பட 4 பேரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த ராஜா, சரவணன் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.