Last Updated : 02 Oct, 2022 02:54 PM

7  

Published : 02 Oct 2022 02:54 PM
Last Updated : 02 Oct 2022 02:54 PM

அசாதாரண சூழலில் புதுச்சேரி | விரைகிறது துணை ராணுவம்: போலீஸ் கட்டுப்பாட்டில் 16 துணை மின் நிலையங்கள்

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தால் அசாதாரண சூழல் உள்ளதால் விரைவில் மத்திய துணை ராணுவப்படை இரு பிரிவினர் புதுச்சேரிக்கு வரவுள்ளனர் என அம்மாநில மின்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், போலீஸ் கட்டுப்பாட்டில் 16 துணை மின் நிலையங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

புதுச்சேரியில் மின்துறை தனியார்மயமாக்கப்படுவதற்கான டெண்டர் வெளியிட்டதையடுத்து கடந்த நான்கு நாட்களாக மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களிலும் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் பல மணி நேரம் ஈடுபட்டனர். இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு புதுச்சேரியே ஸ்தம்பித்தது. இந்த நிலையில் நேற்று மாலை ஐந்து மணிக்கு மேல், புதுச்சேரி முழுவதும் மின்தடை ஒவ்வொரு பகுதியாக ஏற்பட்டது. இதனால் புதுச்சேரியே இருளில் மூழ்கியது. இதையடுத்து மீண்டும் ஆங்காங்கே சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டனர். ஆயுத பூஜை விடுமுறையொட்டி அதிகளவு சுற்றுலாப் பயணிகள் பிற மாநிலங்களில் இருந்து குவிந்திருந்தனர். அவர்களும் மின் தடையாலும், போக்குவரத்து நெரிசல், மறியலால் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மின்தடையால் வீடுகளில் புழுக்கம், கொசுக்கடி தாங்காமல் சாலைக்கு வந்தனர்.

புதுச்சேரியில் அசாதாரண சூழல் நிலவியது. மின்தடை காரணத்தை ஆய்வு செய்தபோது, துணை மின்நிலையங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரிய வந்தது. போராட்டக்குழுவினர் துணை மின்நிலையங்களில் புகுந்து இணைப்பை துண்டித்ததாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். அதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம், பத்துக்கும் மேற்பட்ட துணை மின்நிலையங்களுக்கு நேரில் சென்று நள்ளிரவு வரை ஆய்வு செய்தார். இதேபோல் புதுச்சேரி பிராந்தியங்களான காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளிலும் மின் ஊழியர்களும் மின்இணைப்பை துண்டித்ததால் சீரமைப்பு பணிகள் நடந்தது. கிராமப்பகுதிகளில் இன்றும் மின்விநியோகம் சீராகாததால் மறியல்கள் நடந்தன. அதுபற்றி விசாரித்தபோது, வயல்வெளிகளில் செல்லும் மின் ஒயர்களை துண்டித்தது காரணம் என்று தெரிந்தது. இதையடுத்து சீரமைக்கும் பணி நடக்கிறது.

இதுபற்றி மின்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு,"பொதுமக்களுக்கு இடையூறாக துணை மின்நிலையங்களில் பியூஸ் கேரியர் பிடுங்கிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்மா சட்டம் செயல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. சிஆர்பிஎப் இரு கம்பெனி புதுச்சேரி வரவுள்ளது. கிராமப்பகுதிகளில் ஒயர்கள் அறுக்கப்பட்டுள்ளதை சரி செய்து வருகிறோம். பேச்சுவார்த்தை நடத்தலாமா என்பது பற்றி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்போம். மின்துறை தனியார் மயத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் எண்ணம் இல்லை. டெண்டர் விடப்பட்டுவிட்டது. மின்ஊழியர்கள் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். 16 துணை மின்நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளோம். அது 24 மணி நேரமும் இருக்கும். மின்துறை அலுவலகங்கள் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார். முதல்வர் ஒப்புதலின்றி தனியார் மயமாக்கப்பட்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளதே என்று கேட்டதற்கு, "யார் கூறினார்களோ அவர்களிடம் கேளுங்கள். தேவையெனில் முதல்வரிடம் இதுபற்றி கேளுங்கள்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x