Published : 02 Oct 2022 04:45 AM
Last Updated : 02 Oct 2022 04:45 AM
பள்ளிக் கல்வித் துறையில் அண்மையில் நிர்வாக ரீதியான சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதையொட்டி, தருமபுரியில் கல்வித்துறை நிர்வாகத்துக்கான புதிய அலுவலகங்கள் நேற்று திறக்கப்பட்டன.
தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடக்கக் கல்விக்கான மாவட்ட கல்வி அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினர் வெங்கடேஷ்வரன் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) மான்விழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதேபோல, தருமபுரி நகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளிகளை நிர்வகிப்பதற்கான மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் இடைநிலைக் கல்விக்கான மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றை சட்டப் பேரவை உறுப்பினர் வெங்கடேஷ்வரன் திறந்து வைத்தார்.
மேலும், பென்னாகரம் வட்டம் ஏரியூரில் தொடக்கக் கல்விக்கான மாவட்ட கல்வி அலுவலகத்தை பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி திறந்து வைத்தார்.
கடத்தூர் தொடக்கப்பள்ளி வளாகத்தில், புதிய வட்டார கல்வி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவுக்கு, மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர் கணேசன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் ரேணுகாதேவி, மகேந்திரன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
முன்னதாக கட்டிட திறப்பு விழாவிற்கு வந்த அதிமுகவைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமிக்கு, திமுகவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதிய கட்டிடத்தை திறக்கக் கூடாது எனக்கூறி நுழைவுவாயிலில் மறித்து நின்றனர். இதனால் சட்டப்பேரவை உறுப்பினருக்கும், திமுகவினருக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் திமுகவினர் அங்கிருந்து சென்றனர். இதையடுத்து திறப்பு விழா நடந்தது. திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அரூரில் மாவட்ட கல்வி அலுவலகம்: அரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில், அரூர் கல்வி மாவட்ட அலுவலகம் (தொடக்கக் கல்வி) திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார், புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT