

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்துள்ள பூதமங்கலம் கிராமத்தில் நீராதாரத்தை பாதுகாக்கும் விதமாக 4 கிமீ தூரமுள்ள பாசன வாய்க்கால்களைத் தூர் வாரும் பணியை கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் செய்து வருகின்றனர்.
பூதமங்கலம் கிராமத்துக்கு வெள்ளையாற்றிலிருந்து பிரதான பாசன வாய்க்கால் பிரிந்து வருகின்றது. இந்த வாய்க்கால் உரிய பராமரிப்பின்றி ஆங்காங்கே தூர்ந்துவிட்டது. இதன்காரணமாக கடந்த 5 ஆண்டுகளாகவே ஊரில் உள்ள நீர் நிலைகளுக்கு முழுமையாக தண்ணீர் சென்றடையாத நிலை ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் குப்பை தேங்கி வாய்க்கால் மேடாகிவிட்டது. ஆறு பள்ளமாகி பூதமங்கலத்துக்கு தண்ணீர் வரத்து தடைப்பட்டுவிட்டது.
தூர் வாருவதற்குப் போதுமான அளவு நிதி ஒதுக்கீடு இல்லாததால் பொதுப்பணித் துறையினர் இந்த வாய்க்காலைத் தூர் வாருவதில் கவனம் செலுத்தவில்லை. நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த கிராம மக்கள் தங்களது சொந்த செலவிலேயே தூர் வாருவதென முடிவு செய்தனர்.
அதன்படி, பூதமங்கலம் சர்வதேச சமூக நல நண்பர்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் வெளிநாட்டில் பணியாற்றும் பூதமங்கலம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நிதி திரட்டி, தூர் வாரும் பணியை கடந்த 6-ம் தேதி தொடங்கினர். பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் இரண்டரை கிமீ தொலைவுக்கு தூர் வாரப்பட்டுள்ளது.
இந்தப் பணியை வரவேற்றுள்ள பொதுப்பணித் துறையினர், கரை காவலர்கள் மூலம் பணிகளைக் கண்காணித்து கிராம மக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
பணிகளை பூதமங்கலத்தை சேர்ந்த எஸ்.ஏ.நூர் முகமது, ஏஎம்.மகசூம்தீன், ஏஎம்.ஜவஹர் சாதிக், கே.ஏ.மகசூம் அலி, ஒய்.ஏ.நவாப்தீன், முகமது மகதூம், அகமது மைதீன், ஜலால் ஆகியோர் பொதுமக்கள் சார்பில் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, எஸ்.ஏ.நூர்முகமது கூறியபோது,
“ஒரு பொக்லைன் இயந்திரம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பயன்படுத்தி தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து குளங்களையும் தூர் வார முடிவு செய்துள்ளோம்” என்றார்.
பூதமங்கலம் ஒருங்கிணைப்புக் குழு முகமது மகதூம் கூறியபோது,
“இதன்மூலம் பூதமங்கலத்தில் உள்ள மணற்கேணி, கருத்தான் குட்டை, பள்ளிக்கேணி, குட்டைக்கேணி, ஆதிதிராவிடர்கள் குளம், தட்டான் கேணி உட்பட 6 குளங்கள் ஏற்கெனவே இருந்ததைப் போல முழுமையாக தண்ணீர் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கூத்தாநல்லூர் வழியாக பழையனூர், அரிச்சந்திரபுரம் வரை பாசனத்துக்கு உதவும் அன்னமரசு வாரியிலும் இதன்மூலம் தண்ணீர் தங்கு தடையின்றிச் செல்லும். மேலும், ஆய்குடி, மேலக்கண்ணுச்சாங்குடி, கீழ கண்ணுச்சாங்குடி போன்ற கிராமங்களின் வடிகாலாகவும் இந்த வாய்க்கால் இருப்பதால் மழை வெள்ளச் சேதத்திலிருந்து பாதுகாக்கப்படுவதுடன், அந்த கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் பயிர்கள் பாதுகாப்பாக வளர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
பூதமங்கலம் ஒய்.ஏ.நவாப்தீன் கூறியபோது,
“பொதுமக்கள் தங்களது வீட்டின் முன்பகுதியில் செல்லும் வாய்க்காலின் மேல்புறத்தில் நடைபாதை அமைப்பதற்காக வாய்க்காலுக்குள் போட்டிருந்த ஒரு அடி விட்டத்திலான சிறிய குழாயை மாற்றி 3 அடி விட்டத்தில் பெரிய குழாயைப் பதித்து ஒத்துழைப்பு அளித்தனர். இதுவரை சுமார் ரூ.2.25 லட்சம் செலவாகியுள்ளது. மேலும், ரூ.1.25 செலவிடவுள்ளோம்” என்றார்.