

திருவான்மியூரில் தனியார் நிதி நிறு வனத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவர், ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெசன்ட்நகர் எம்.ஜி. சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்துக்கு கடந்த 28-ம் தேதி 5 பேர் வந்தனர். மேலாளரை கத்தியால் தாக்கி, அவரிடமிருந்து சாவியைப் பிடுங்கி லாக்கரை திறக்க முயன்றார்.
அப்போது அலுவலகத்தில் பொருத் தப்பட்டிருந்த அலாரத்தையாரோ ஒலிக்கச் செய்துள்ளனர். அலாரம் சத்தம் கேட்டதால் பதற்றம் அடைந்த கொள்ளையர்கள், அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் அறிவழகி (39), பாத்திமா மெர்சி ஆகியோர் அணிந் திருந்த 6 பவுன் செயின்களை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக் கப்பட்டது. அலுவலகத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராக் களின் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்களின் உருவம் தெளிவாக தெரிந்தது. அதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பழைய குற்றவாளிகள் என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, நாவலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (23), தரமணி சந்துரு (26), செம்மஞ்சேரி விஜய் (29), ஆகிய 3 பேர் கடந்த 31-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 பவுன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அடையாறு பகுதியைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் பாலாஜி (22), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் லிங்கேஸ்வரன் (20) ஆகியோரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.