Published : 02 Oct 2022 04:20 AM
Last Updated : 02 Oct 2022 04:20 AM

நடிகர் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் மரியாதை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில், அவரது சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். படம்: பு.க.பிரவீன்

சென்னை

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணி மண்டபத்தில், அவரது படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் விழாஅரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அடையாறு தேஷ்முக் சாலையில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் நடந்த நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

அவரை, சிவாஜியின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் ஆகியோர் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, மணி மண்டபத்துக்கு வெளியே சிவாஜி கணேசனின் சிலை அருகில்வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சிவாஜியின் அரிய புகைப்படங்களை பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வே.வேலு, மு.பெ.சாமிநாதன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழச்சி தங்க பாண்டியன் எம்பி,

தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்ஜிஆர்திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவர் ராஜேஷ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சு.திருநாவுக்கரசர் எம்பி, கவிஞர் வைரமுத்து, திரைப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிவாஜி கணேசன் பிறந்தநாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், “நடிப்புக் கலைக்கு என்றும் இலக்கணமாகத் திகழ்பவர் நடிகர் திலகம்.பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து, தந்தை பெரியாரால் ‘சிவாஜி ’ என்ற பட்டம் பெற்று, அந்தப் பெயரிலேயே வரலாற்றில் நிலைத்துள்ளவர்.

பராசக்தி ஹீரோவாக புரட்சிக் கனல் கக்கி, வரலாற்று நாயகர்களின் திரை வடிவமாக நம் மனதில் பதிந்துள்ள நடிகர் திலகம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆருயிர் நண்பர். 1952-ம் ஆண்டு வெளியான அவரது முதல் திரைப்படமான பராசக்திக்கு இது 70-ம் ஆண்டு. கருணாநிதியின் கூர்மிகு தமிழும், நடிகர் திலகத்தின் நடிப்பும் தமிழ்த் திரையுலகின் திருப்புமுனைகள்.

கலை உள்ளவரை செவாலியே சிவாஜி கணேசனின் புகழ் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

சத்தியமூர்த்தி பவன்: தமிழக காங்கிரஸ் சார்பில், சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றசிவாஜி கணேசன் பிறந்தநாள்விழாவில், கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் நிர்வாகிகள் சிவாஜி படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x