

செங்கல்பட்டு அடுத்துள்ள அஞ்சூர் கிராமத்தின் அடர்ந்த வனப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தமிழக வனத்துறை அமைச்சர் ஆனந்தன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கேமரா மற்றும் கூண்டுகளை பார்வையிட்ட அவர், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதால்தான் சிறுத்தைப் புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான வல்லம், ஒழலூர், பழவேலி, வேதநாராயணபுரம், இருங்குன்றபள்ளி ஆகிய கிராம பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக சிறுத்தைப்புலி சுற்றி வருகிறது. அதை பிடிக்க முதுமலை, பொள்ளாச்சி, முண்டந் துறை, களக்காடு பகுதியில் இருந்து சிறப்பு வன அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலை யில், மகேந்திரா சிட்டி அருகே அஞ்சூர் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் அமைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் 8 வயது ஆண் சிறுத்தைப்புலியின் நடமாட் டம் பதிவானது. இதையடுத்து, சிறுத்தைப்புலியை பிடிக்க அஞ்சூர் வனப்பகுதியில் வனத் துறையினர் இரண்டு கூண்டுகளை அமைத்தனர்.
இந்நிலையில், தமிழக வனத் துறை அமைச்சர் ஆனந்தன், அஞ்சூர் வனப்பகுதிக்கு நேரில் சென்று சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள கூண்டுகள் மற்றும் தானியங்கி கேமரா ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் ஆனந்தன், “சிறுத்தைப்புலியை பிடிக்க அமைக்கப்பட்டுள்ள கூண்டுகளில் உயிருள்ள விலங்குகளை வைக்கக்கூடாது என புளூகிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளதால் இறைச்சி போன்றவற்றை அதில் வைத்துள்ளனர். மேலும், வனப்பகுதியில் சுதந்திரமாக சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் குடியிருப்புகள் அருகே சிறுத்தைப்புலி சுற்றி திரிவதால், மக்களின் பாதுகாப்பு கருதி அதை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் சிறுத்தைப்புலி பிடிபடும் என வனத்துறையினர் தெரிவித்தனர்” என்றார்.
வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்களின் பாதுகாப்பு குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ஆனந்தன் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது தலைமை வன உயிரின ஆய்வாளர் லஷ்மி நாராயணன், சென்னை மண்டல வனப்பாதுகாவலர் யோகேஷ்சிங் மற்றும் மாவட்ட வன அலுவலர் சொளந்திர பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.