Published : 20 Apr 2014 01:29 PM
Last Updated : 20 Apr 2014 01:29 PM

முல்லைப் பெரியாறில் புதிய அணை: எதிர்காலத்தில் தமிழகமும் வலியுறுத்தும் - கேரள முதல்வர் உம்மன்சாண்டி நம்பிக்கை

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டவேண்டும் என்று தற்போது கேரளம் கேட்கிறது. எதிர்காலத்தில் இதை தமிழகமும் வலியுறுத்தும் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஆர்.பிரபுவை ஆதரித்து சனிக்கிழமை கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியது: தமிழகத்தில் தனித்து நிற்பது என்ற சிறப்பான முடிவை காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. இந்த முடிவே சரியாக முடிவு என உறுதியாகச் சொல்கிறேன். இது காங்கிரஸின் பலத்தை மேலும் அதிகரிக்கும்.

மக்களிடையே உள்ள பிரிவினையைப் பயன்படுத்தி வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது. அந்த முயற்சி வெற்றி பெறாது. இந்திய மக்கள் நிச்சயம் மதச்சார்பின்மை மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டையே முக்கியப்படுத்துவார்கள். இந்தியாவில் மோடி அலை என்று எதுவும் இல்லை.

தண்ணீர் வழங்க தயார்

கேரளம் - தமிழ்நாடு இடையேயான குடிநீர் விநியோகம் குறித்து உம்மன்சாண்டி குறிப்பிடுகையில், கேரளம் - தமிழகத்துக்கிடையே தண்ணீர் வழங்குவதில் ஒருசில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நல்ல உறவு நிலவி வருகிறது. தமிழகத்துக்கு அதே கொள்ளளவில் தண்ணீர் வழங்க கேரளம் தயாராக உள்ளது. கேரள தண்ணீர் தமிழ்நாட்டுக்கு பயன்படுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தண்ணீர் வழங்குவதில் எந்த கேள்வியும் இல்லை. அணை மிகவும் பழைய அணை என்பதே பிரச்சினை. 999 வருட ஒப்பந்தத்தின்படி, இந்த அணை சேதமடையாமல் இருக்கும் என யாரும் கூற முடியாது. எனவே புதிய அணை கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை தமிழக அரசு இப்போது வலியுறுத்தவில்லை.

ஆனால், கேரளாவில் உள்ள ஐந்து மாவட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது. அதனாலேயே புதிய அணை கட்ட வேண்டும் என தற்போது கேரள அரசு வலியுறுத்துகிறது. முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதை எதிர்காலத்தில் தமிழ்நாடும் வலியுறுத்தும். புதிய அணை கட்டுவதால் தமிழகத்துக்கு தண்ணீர் விநியோகப்பதில் எந்த குறைபாடும் இருக்காது. தற்போது வழங்கப்படும் அளவு குடிநீரை கேரள அரசு வழங்கும். பலமான அணை என்பது மட்டுமே தற்போதைய தேவை என உம்மன்சாண்டி தெரிவித்தார்.

இடைமலையாற்றில் அணை

மேலும், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ், ஒருபகுதியாக கேரள அரசு இடைமலையாற்றில் அணை கட்டும் திட்டம் குறித்து ஆலோசிப்பதாகவும், பாலக்காடு, முதலைமடா பகுதியில் தொடர்ந்து வரும் தனியார் கல்குவா ரிகள் பிரச்சினையில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உம்மன்சாண்டி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x