Published : 02 Oct 2022 01:17 AM
Last Updated : 02 Oct 2022 01:17 AM

அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாடு, திருவனந்தபுரம் வழுதக்காட்டில் உள்ள தாகூர் தியேட்டரில் நடந்தது. இந்த மாநாட்டில் இன்று ‘கூட்டாட்சி மற்றும் மத்திய - மாநில உறவு’ என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அதில், "அண்மைக் காலமாக, கேரளத்தில் நடைபெறும் கூட்டணிக் கட்சிகளின் மாநாடுகளுக்கும் என்னை அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைப் போலவே, நானும் மகிழ்ச்சியோடு அவற்றில் பங்கேற்கிறேன். மாநில எல்லைகளால் நாம் பிரிந்திருக்கிறோம். எனினும், இந்தியாவில் கூட்டாட்சியை வலுப்படுத்த எல்லைகளை மறந்து நாம் இங்கே ஒன்றுகூடியிருக்கிறோம். கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆம் மாநாடு நடந்தபோது நான் அதில் பங்கேற்றேன். அப்போது, என் பெயர் ஸ்டாலின். அதனால் என்னை அழைக்காமல் இருக்க உங்களால் முடியாது என்று குறிப்பிட்டேன். என் பெயரினோடு உங்களுக்கு இருக்கும் அன்பை இங்கேயும் என்னால் காண முடிகிறது. நான் இதை வேறு ஒரு கட்சியின் நிகழ்ச்சியாகக் கருதவில்லை. எனது சொந்த கட்சியின் நிகழ்ச்சி போலத்தான் கருதுகிறேன்.

திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குமான நட்பு என்பது இரண்டு இயக்கங்களும் தோன்றிய காலத்திலேயே உருவான நட்பு. சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் அவர்கள், சோவியத் நாட்டுக்குச் சென்றுவிட்டு வந்த பிறகுதான் தனது சமதர்மக் கொள்கையை வடிவமைத்தார். தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தின் மாபெரும் தூண்களாகப் போற்றப்படக்கூடிய ம.வெ.சிங்காரவேலரும், ஜீவா அவர்களும் சுயமரியாதை இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்.

நாம் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும், எங்கள் கட்சிக் கொடியில் பாதி சிவப்பு நிறம் இருக்கிறது. நாம் ஒரே கொள்கைக்காரர்கள் என்பதால்தான், தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும் கூட்டணியைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். இது கேரளாவில் நடக்கக்கூடிய மாநாடாக இருந்தாலும், இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சி உருவாக வேண்டும் என்பதும், மாநிலத்தில் சுயாட்சி மலர வேண்டும் என்பதும், இந்தியா முழுமைக்குமான கருத்தியல். நான் தமிழ்நாட்டைக் காக்கவும், மாண்புமிகு தோழர் பினராயி விஜயன் அவர்கள் கேரளத்தைக் காக்கவும் மட்டும் கூட்டாட்சி என்ற முழக்கத்தை முன்னெடுக்கவில்லை.

இந்தியாவை முழுவதுமாக காக்க வேண்டுமானால், முதலில் மாநிலங்களை நாம் காக்க வேண்டும். மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா. அதனால் இந்த மாநாட்டையே நடத்துகிறீர்கள். நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறேன், பினராயி விஜயன் அவர்கள் கேரளத்தில் முதலமைச்சராக இருக்கிறார். அதனால் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைக்க முடியாது. இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சமூகநீதியை - நிலைநாட்ட நாம் குரல் கொடுத்தாக வேண்டும்.

நமது கொள்கைகள் உன்னதமானவையாக இருக்கலாம், ஆனால் அவை வெற்றி பெற வேண்டுமானால், அக்கொள்கையை ஆதரிக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். இங்கொன்றும் அங்கொன்றுமாக தனித்தனிக் குரலாக ஒலிப்பதால் பெரிய பயனில்லை. ஒரே குரலாக ஒலிக்க வேண்டும்.

அத்தகைய ஒற்றுமை ஓரிரு மாநிலங்களில் மட்டும் உருவானால் போதாது. அனைத்து மாநிலங்களிலும் உருவாக வேண்டும். அனைத்திந்திய சக்தியாக நாம் உருவெடுக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 356-ஆவது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி கலைக்கலாம் என்ற ஜனநாயக விரோதச் செயல் நடத்தப்பட்ட முதல் மாநிலம் கேரளா தான். அப்படிப்பட்ட இந்த மண்ணில்தான் இப்போது மாநில சுயாட்சியை வலியுறுத்தியும், கூட்டாட்சியை வலியுறுத்தியும் மாநாடு நடக்கிறது. அந்த ஜனநாயகத்துக்குப் புறம்பான செயலுக்குப் பலியான முதல் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. எனவே உங்களை விட இம்மாநாட்டை நடத்துவதற்கு தகுதியான கட்சி இருக்க முடியாது.

அதே 356-ஆவது பிரிவால், ஒரு முறையல்ல; இரண்டு முறை தமிழகத்தில் ஆட்சியை இழந்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். என்னை நீங்கள் பேசுவதற்காக அழைத்து இருக்கிறீர்கள். இது பேசுவதற்கான நேரம் மட்டுமல்ல. இது செயல்படுவதற்கான நேரம். இந்திய அரசியலமைப்பை மறு ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. உண்மையான, முழுமையான கூட்டாட்சித்தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படுகிற வரையில் நாம் நமது முழக்கத்தையும் செயலையும் தொடர்ந்து செய்தாக வேண்டும்.

நேரடியாகச் செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை சட்டத்தின் போர்வையில் செய்யப் பார்க்கிறார்கள். கவர்னர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பா.ஜ.க. தலைமை.நமது எண்ணங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக எழுப்பினால் அதற்கு உரிய பதில் கூட நாடாளுமன்றங்களில் சொல்லப்படுவது இல்லை. மக்கான உரிமையை நிலைநாட்ட கடிதம் அனுப்பினால் அதற்கான பதில் கூட ஒன்றிய அரசிடம் இருந்து நமக்கு வருவது இல்லை. வெறும் கையை பிசைந்து கொண்டு மாநிலங்கள் நிற்கிறது

இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால், இந்திய ஒன்றியத்துக்குள் உள்ளடங்கிய அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். மாநிலங்களைக் காப்பாற்றுவது என்பது மாநில மொழியைக் காப்பாற்றுவது! மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் வாழும் தேசிய இனங்களைக் காப்பாற்றுவது! மாநிலங்களின் பண்பாட்டைக் காப்பாற்றுவது! அந்த மாநில மக்களின் உரிமைகளைக் காப்பாற்றுவது! மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும்" என்று பேசியுள்ளார்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x