Last Updated : 01 Oct, 2022 11:39 PM

 

Published : 01 Oct 2022 11:39 PM
Last Updated : 01 Oct 2022 11:39 PM

என் குப்பை என் பொறுப்பு... ஆளும் கட்சியினருக்கு அந்தப் பொறுப்பு கிடையாதா?

சாலையில் சிதறி கிடக்கும் குப்பைகள்

கள்ளக்குறிச்சி: ’என் குப்பை என் பொறுப்பு’ என அரசு ஒருபுறம் பல கோடிகளை செலவழித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் வேளையில், மறுபுறம் ஆளும்கட்சியினரே சாலைகளிலும் பொது இடங்களிலும் குப்பைகளை உருவாக்கி அசுத்தமாக்கி வருகின்றனர்.

நாட்டை தூய்மைப்படுத்தவும் நோய்களைத் தீர்க்கவும் அரசாங்கத்தை எதிர்பார்ப்பதோடு அரசாங்கத்தைக் குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கானோர் கொட்டும் கழிவுகளை அரசாங்கம் ஒரு சிலரைக் கொண்டு தூய்மைப்படுத்துவதென்பது சிம்ம சொப்பனமே. இறுதியில் பெரும் துன்பத்திற்கு ஆளாவது மக்களாகிய நாம் மட்டுமே. எனவே, வளர்ந்த நாடுகளில் மக்கள் தங்கள் குப்பைகளுக்கு தாங்களே பொறுப்பு என்கிற மனநிலையில் செயல்படுவதுபோல் நாமும் ஏன் செயல்படக்கூடாது?

அதனால் ஒவ்வொரு நபரும், என் குப்பை என் பொறுப்பு என்கிற மனநிலையில் செயல்பட்டால் நாட்டைத் தூய்மையடையச்செய்வதோடு மக்களும் பெயர் தெரியாத பற்பல நோய்களிலிருந்து விடுபட்டு சுகாதார இந்தியாவை உருவாக்க முடியும் என்பதை முன்னெடுத்து, நமது குப்பைகளை நாமே முறையாக அகற்ற வேண்டும் என்பதே இந்த எண்ணக்கருவின் நோக்கமாகும். இதை செயற்பாட்டு ரீதியில் நடைமுறைபடுத்த வேண்டும் என்பதற்காக பல திட்டங்கள் தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன. சமீப காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை தமிழகம் முழுவதும் அமலாக்கம் செய்வதைக் காணலாம்.

இதன் மூலம் பொது இடங்களில் உள்ள குப்பைகளை மாணவர்கள், தன்னார்வ தொண்டர்களை கொண்டு முறையாக அகற்றுவதற்காக தொண்டு பணிகள் முன்னெடுக்கப்படுவதை செய்திகள் மூலமாக அறிய கூடியதாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதற்கான முன்னெடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு மாணவர்கள் முதல் வீட்டை நிர்வகிப்பவர்கள் வரை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்டவை நடத்தி பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், அரசை வழிநடத்தும் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் அண்மை தினங்களாக செய்துவரும் சில செயல்கள் பொதுமக்களிடையே முகச்சுளிப்பை ஏற்படுத்தி வருகிறது. திமுக உட்கட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வாகி, தலைவரை சந்தித்துவிட்டும் மீண்டும் சொந்த மாவட்டத்திற்கு வரும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அளிக்கப்படும் தடபுடலான வரவேற்பால் அந்த மாவட்டத்தில் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் உதயசூரியன் இன்று மாலை உளுந்தூர்பேட்டைக்கு வந்தபோது, கட்சியினர் புடைசூழ சுங்கச்சாவடியிலிருந்து அவருக்கு தாரை தப்பட்டையுடன் வெடிச் சத்தத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் வருவதை ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சாலையில் இரு சக்கர முதல் கனரக வாகனங்கள் வரை புழங்கிக் கொண்டிருக்கையில், அடுத்தவருக்கு ஏற்படும் இடையூறை சிறிதும் சிந்திக்காமல், சாலையின் நடுவில் எவருக்கும் எச்சரிக்கைக் கூட விடுக்காமல், வெடி வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது வெடித்த வெடியிலிருந்து சிதறிய காகிதங்கள் சாலை நெடுகிலும் சிதறிக் கிடந்தது.

அப்போது கடைகாரர் ஒருவர், நகராட்சி நிர்வாகம் குப்பை வரி எங்களிடம் வசூலிக்கின்றனர். ஆனால், இப்பகுதியையே குப்பை மேடாக்கியர்களை விட்டுவிட்டு, எங்களிடம் குப்பை வரி வசூலிப்பது எந்த விதத்தில் நியாயம். இதே கவுன்சிலர்களும், நகர்மன்றத் தலைவரும் இரு தினங்களுக்கு முன் எனது குப்பை எனது பொறுப்பு என துண்டு பிரசுரம் வழங்கிவிட்டுச் சென்றனர்.

தற்போது அவர்களே குப்பையாக்கிவிட்டு செல்கின்றனர். எனது குப்பை எனது பொறுப்பு என்பது ஆளும் கட்சியினருக்கு கிடையாதா என வணிகர்களின் குமுறல்கள் ஒருபுறும் இருக்க, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த ஊரை குப்பையாக்க கிளம்பிக் கொண்டிருந்தனர் ஆளும் கட்சியினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x