

கோவையில் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச போட்டித் தேர்வு பயிற்சி பெற்ற 7 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வங்கி மற்றும் ரயில்வே துறையில் பணி வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு மாணவ, மாணவிகளை தயார்படுத்தும் நோக்கத்தில் டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் இலவச வகுப்புகளில் பங்கேற்ற பலர், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசுப் பணிகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.
அடுத்தகட்ட முயற்சியாக மாற்றுத்திறனாளிகளையும், அரசுப் பணிக்குத் தேர்வடைய வைக்கும் முயற்சியில் இந்த அமைப்பு இறங்கியது. தேசிய பார்வையற்றோர் இணையத்துடன் இணைந்து, பார்வையற்ற, பார்வைக்குறைபாடுள்ள மாணவ, மாணவியருக்கு கடந்த இரண்டு மாதங்களாக போட்டித் தேர்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. வரதராஜபுரத்தில் நடைபெற்ற இந்த வகுப்புகளில் ஏராளமானோர் படித்து வந்தனர்.
சமீபத்தில் வெளியான பாரத ஸ்டேட் வங்கிப் பணிக்கான போட்டித் தேர்வில், இந்த மையத்தின் சார்பில் 36 பேர் பங்கேற்றனர்.
முதல்நிலைத் தேர்வில் 10 பேர் தேர்வாகி இறுதித் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இறுதித் தேர்வில் பார்வைக்குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் 6 பேர் தேர்வாகி, வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா வரதராஜபுரத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கோவை மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை துணை இயக்குநர் ஏ.ஜோதிமணி கலந்துகொண்டார். தேசிய பார்வையற்றோர் இணைய மண்டல ஒருங்கிணைப்பாளர் சதாசிவம், அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் கணேஷ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி சிவஞானம், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுரேஷ், வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த மகேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இலவச பயிற்சி வகுப்பில் பங்கெடுத்து, போட்டித் தேர்வின் மூலம் வங்கிப் பணிக்குத் தேர்வான ஆர்.அசோக், ஏ.யுவராணி, ஜி.பிரியா, எம்.வாணி, ஜி.கார்த்திகா, எஸ்.சண்முகம், ரயில்வே தேர்வில் வெற்றி பெற்ற மாணவர் ஏ.பிரவீன் ஆகிய ஏழு பேரையும் பாராட்டி கேடயங்கள் வழங்கப்பட்டன.
சாதாரண பயிற்சியே போதும்
பார்வையற்ற, பார்வைக்குறை பாடுள்ள மாணவர்கள் போட்டித் தேர்வு பயிற்சி பெறுவது குறித்து மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் கூறும்போது, ‘மற்ற மாணவர்களுக்கு எந்த மாதிரியான பயிற்சிகளை கொடுக்கிறோமோ அதேபோன்ற பயிற்சிதான் இவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால் மற்றவர்களை விட மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் தனித்திறமைகள் அதிகமாக உள்ளன.
அதேபோல கடின உழைப்பும், தம்மால் முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு அதிகம். 2 மாத பயிற்சியில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு என சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் யாரும் நியமிக்கவில்லை. வழக்கமாக, மற்ற மாணவர்களின் படிப்பு வசதிக்காக, வாட்ஸ் அப் குழு இருக்கிறது. அதில் படிக்க வேண்டிய பாடத் திட்டங்கள் குறித்த தகவல்கள் பகிரப்படும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்த ஏதுவாக ஒலி வடிவில் பாடத் திட்டங்களை அதில் பகிர்ந்துவிடுவோம்.
கடந்த ஆண்டு சுதா என்ற மாணவி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணி வாய்ப்பு பெற்றார். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு 6 பேர் வங்கிக்கும், ஒருவர் ரயில்வேக்கும் தேர்வாகியுள்ளனர். வரும் காலத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைத்துத் துறைகளிலும் தடம் பதிக்க இதுபோன்ற முயற்சிகள் ஊக்கமளிக்கும்’ என்றார்.
போட்டித் தேர்வே சிறந்தது
கோவை மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை துணை இயக்குநர் ஏ.ஜோதிமணி கூறும்போது, ‘வேலைவாய்ப்பு மையத்தின் மூலம் தனியார் அல்லது தற்காலிக வேலைவாய்ப்புகளே அதிகளவில் பெற்றுத்தரப்படுகிறது. ஆனால் போட்டித் தேர்வு மூலம் கிடைக்கும் வேலை நிரந்தரமானதாக இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்புத் துறையே, போட்டித் தேர்வு இலவச பயிற்சி வழங்குகிறது. அதில் விருப்பம் இல்லாதவர்களுகு தொழில் பயிற்சி வாய்ப்புகளும் கொடுக்கப்படுகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்ற வேலைகளுக்குச் செல்வதை விட, போட்டித்தேர்வு மூலம் அரசுப் பணியைப் பெறுவதே சிறப்பானது’ என்றார்.