Published : 01 Oct 2022 07:01 AM
Last Updated : 01 Oct 2022 07:01 AM

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 200-க்கு 200 பெற்று 7 பேர் முதலிடம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம்அறிவியல் பாடத்துக்கு நடப்புக் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியலை வெளியிடுகிறார் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு, இளம்அறிவியல் பாடப்பிரிவுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. 200-க்கு200 தரவரிசை பெற்று 7 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டு இளம்அறிவியல் பாடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி நேற்று வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டுக்கு இளம்அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மொத்தம் 6,980 இடங்களுக்கு சேர்க்கை நடத்தப்பட உள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்புக் கல்லூரிகளில் 2,567 இடங்களும், இப்பல்கலைக்கழகத்தை சார்ந்த 28 இணைப்புக் கல்லூரிகளில் 4,413 பேரும் படிக்கும் வாய்ப்பு உள்ளது. இணைப்புக் கல்லூரிகளில் அரசு இடம், மேனேஜ்மென்ட் இடம் என இரு பிரிவுகள் உள்ளன.

65 சதவீத அரசு இடத்தில் 2,868 பேரும், மேனேஜ்மென்ட் இடத்தில் 1,545 பேரும் படிக்கும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தரவரிசைப் பிரிக்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 200-க்கு 200 தரத்தை 7 பேர் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.

ஆன்லைன் முறையில் கலந்தாய்வு: மருத்துவக் கலந்தாய்வு முடிந்தவுடன், வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும். இதுதொடர்பான அனைத்து விவரங்களும் www.tnau.ac.in என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர் ஜி.கோபி, ஈரோடு மாவட்டம் எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஆர்.சுப, புதுக்கோட்டை மாவட்டம் சவுடாம்பிகா மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தமாணவர் ஆர்.கார்த்திக் ராஜா,சேலம் ஏஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிதாரணி செங்கோட்டு வேலு, ஈரோடு மாவட்டம் யுஆர்சி பள்ளி மாணவர் டி.முத்துப்பாண்டி, தருமபுரி மாவட்டம் அவ்வை மெட்ரிக் பள்ளி மாணவி எம்.ஹரிணிகா, ராமநாதபுரம் மாவட்டம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஆர்.ராஜ ஐஸ்வர்ய காமாட்சி ஆகிய 7 பேர் 200-க்கு200 தரம் பிடித்து முதலிடம் பிடித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x