Published : 29 Nov 2016 08:32 AM
Last Updated : 29 Nov 2016 08:32 AM

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதலில் ஈடுபட்டதாக 34 பேர் மீது வழக்கு

நடிகர்கள் விஷால், கருணாஸ் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் மற்றும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதலில் ஈடுபட்டதாக 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தின் பொதுக் குழு கூட்டம் கடந்த 27-ம் தேதி சென்னை தி.நகரில் நடந்தது. உறுப்பினர் அட்டை உள்ளவர்கள் மட்டுமே நடிகர் சங்க வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலாவதி யான உறுப்பினர் அட்டை வைத் திருந்தவர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக் கப்படவில்லை. இதனால் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத் தனர். இதற்கிடையே நடிகர் சங்கத் துணைத் தலைவர் கருணாஸின் கார் கண்ணாடியை ஒருவர் கல்லை எறிந்து உடைத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்த நபரை கருணாஸின் ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். போலீஸார் விரைந்து வந்து அவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவரது பெயர் பிரபு என்பதும், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. கார் கண்ணாடி உடைக்கப்பட்டது குறித்து கருணாஸின் கார் ஓட்டுநர் கார்த்திக், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் பிரபு மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. கருணாஸின் ஆதர வாளர்கள் தாக்கியதாக பிரபு கொடுத்த புகாரின்பேரில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

மேலும், நடிகர் சங்க பொதுக் குழு கூட்டத்தில் மோதலில் ஈடுபட்டதாக 19 பேர் மீது தேனாம் பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், சரத்குமார், ராதாரவி ஆகியோர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அறிவித்தார். அதைத் தொடர்ந்து வடபழனி குமரன் காலனியில் உள்ள நடிகர் விஷாலின் அலுவலகம் மற்றும் சொகுசு கார் மீது சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்தது.

இந்த கல்வீச்சு சம்பவம் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கற்களை வீசும் நபர்களின் உருவங்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. அதை வைத்து விசாரணை நடத்தப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x