Published : 01 Oct 2022 06:24 AM
Last Updated : 01 Oct 2022 06:24 AM
ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் உரிமம் இல்லாத 111 நாட்டுத் துப்பாக் கிகளை தாமாக முன்வந்து கிராம மக்கள் ஒப்படைத்துள்ளதாக, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயினி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனச்சரகத்தில் அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், கடந்த 2-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தாமாக முன் வந்து ஒப்படைக்க வேண்டும். துப்பாக்கிகளை ஒப்படைப் பவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்வதில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து 7 வனச்சரகங்களிலும் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், 20-ம் தேதிக்கு பிறகு மலைக்கிராமங்களில் வனத்துறையினர் சோதனை நடத்தி அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்படும், என தெரிவித்தனர்.
மேலும், அக்டோபர் 5-ம் தேதி வரை இதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தேன்கனிக்கோட்டையில் 46:
தற்போது, ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 7 வனச்சரகங்களில் உள்ள கிராம மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வால், 111 நாட்டுத்துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைத்துள்ளனர். இதில் ஜவளகிரி வனச்சரகத்தில் அதிகபட்சமாக தேன்கனிக்கோட்டையில் 46 நாட்டுத் துப்பாக்கிகளும், ஜவளகிரியில் 40, அஞ்செட்டியில் 13, உரிகம் 5, ஓசூர் 4, கிருஷ்ணகிரி 3 துப்பாக்கிகள் ஒப்படைத்துள்ளனர். மொத்தம் 111 நாட்டுத் துப்பாக்கிகளும், ஓசூர் ஏஎஸ்பியிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாராட்டு, பரிசுகள்: இதுதொடர்பாக சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திய வனத் துறையினர், மலைக்கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அனைவருக்கும் பாராட்டி, பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், மாவட்ட உதவி வனபாதுகாவலர்கள் ராஜாமாரியப்பன், வெங்கடேஷ்பிரபு, வனச்சரகர்கள் ஓசூர் ரவி, தேன்கனிக்கோட்டை முருகேசன், உரிகம் வெங்கடாசலம், ஜவளகிரி சுகுமார், அஞ்செட்டி சீதாராமன், வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT