

போலீஸாருக்கு போக்கு காட்டி வந்த வேந்தர் மூவிஸ் மதன், கைது செய்யப்பட்டது எப்படி என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேந்தர் மூவிஸ் மதன், கடந்த மே மாத இறுதியில் திடீரென மாயமானார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் லலிதா லட்சுமி மேற்பார்வையில் கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் விசா ரணை நடத்தினார். இதற்கிடையே, மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்ததாக மதன் மீது தரப்பட்ட புகாரும் சேர்ந்துகொண்டது. இந்த வழக்கையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர்.
மதன் விவகாரத்தில் போலீஸா ருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனால், சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், ரகசியமாக சில தனிப்படைகளை உருவாக்கினார். கூடுதல் ஆணையர் சங்கர், இணை ஆணையர் மனோகரன் ஆகியோர் மேற்பார்வையில், துப்பு துலக்குவதில் கைதேர்ந்தவரான அம்பத்தூர் துணை ஆணையர் சுதாகர் தலைமையில் தனிப்படை உருவாக்கப்பட்டது.
இதில், ஆவடி உதவி ஆணை யர் நந்தகுமார், போக்குவரத்து உதவி ஆணையர் சுப்பிரமணி, மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் கள் சரவணன், அசோகன், சிவராம் குமார், அன்பரசன், மஞ்சுளா, வடபழனி ஆய்வாளர் ஆல்பின் ராஜ், பூந்தமல்லி ஆய்வாளர் சந்திரசேகர், செகரட்டேரியட் காலனி ஆய்வாளர் மில்லர் ஆகியோர் இடம் பெற்றனர். தனிப்படை போலீஸார், முதலில் செல்போன் மூலம் துப்பு துலக்க முடிவு செய்தனர். ஆனால், மாயமானதில் இருந்து செல்போன் பயன்படுத்துவதை மதன் தவிர்த்து விட்டார். இதனால், தனிப் படையினரின் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து வாரணாசி, ரிஷிகேஷ், ஹரித்துவார், திருவனந்தபுரம், கொச்சி, நாகர் கோவில் போன்ற பகுதிகளின் தனிப்படை போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனாலும், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மதனின் நண்பர் கள், உறவினர்கள், அவருடன் பணியாற்றியவர்கள் என ஒவ்வொருவரிடமும் தனித்தனி யாக விசாரணை நடத்தப்பட் டது. மதனின் பெற்றோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனாலும், சிறு தடயம்கூட சிக்கவில்லை.
உத்தராகண்டில் சொத்து
இந்நிலையில், மதன் தனது பெண் தோழி ஒருவருக்கு உத்தரா கண்ட் மாநிலத்தில் சொத்து வாங்கிக் கொடுத்து, அங்கு அவருடன் மகிழ்ச்சியாக இருந் ததை போலீஸார் கண்டுபிடித்தனர். சொத்து வாங்குவதற்காக மத னுக்கு உதவி செய்தவர்கள் பற்றிய தகவலை தனிப்படையினர் சேகரிக்கத் தொடங்கினர்.
இதற்கிடையே, நீண்ட நாட் களுக்குப் பிறகு மதன் செல்போன் பயன்படுத்த ஆரம்பித்தார். அதிலும் வாட்ஸ்அப்பை மட்டுமே பயன்படுத்தினார். இதில்கூட 15 நாட்களுக்கு ஒருமுறை வெவ்வேறு எண்களை பயன்படுத்தினார். இதற்கான சிம்கார்டுகளை நண்பர்கள் பெயரில் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் மதன் அடிக்கடி தொடர்புகொண்டது உறுதி செய்யப்பட்டது. வடபழனியைச் சேர்ந்த அந்தப் பெண்ணை போலீ ஸார் கண்டுபிடித்து தனி இடத் தில் வைத்து விசாரித்தனர். அப்போதுதான் மதன் வாட்ஸ் அப்பை மட்டும் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனால் உஷாரான போலீஸார், சைபர் கிரைம் ஆய்வாளர் அன்பரசன் உதவியை நாடினர். அவர் மதனின் நடமாட்டத்தை துல்லிய மாக கண்காணித்து தனிப் படையினருக்கு தகவல் கொடுத் தார்.
மேலும், வடபழனி பெண்ணிடம் விசாரித்தபோது உத்தராகண்டில் உள்ள ரூர்கியில் மதன் நிலம், வீடு வாங்கியதும் கடந்த 6 மாதங்களாக உத்தராகண்ட், மணிப்பூர், கர்நாடகா மாநிலங்களில் மாறி மாறி தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது. இறுதியில், மணிப்பூர் மாநிலம் இம்பாலில் தங்கியிருப்பது தெரிந்தது.
கடந்த ஒரு மாதமாக தனிப்படை போலீஸார் மணிப்பூரில் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். இதை தெரிந்துகொண்ட மதன், அங்கிருந்து தப்பி திருப்பூருக்கு வந்துவிட்டார். மணிப்பூரில் தங்கியிருந்த மதனின் கூட்டாளி ஒருவர், திருப்பூருக்கு வந்துள் ளார். அவரை போலீஸார் பின்தொடர்ந்து விசாரித்தபோது, மதன் திருப்பூரில் உள்ள பெண் தோழி ஒருவர் வீட்டில் கடந்த 20 நாட்களாக பதுங்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து திருப்பூருக்கு விரைந்த தனிப்படை போலீஸார், குறிப்பிட்ட அந்த வீட்டை சுற்றிவளைத்து மதனை கைது செய்ய திட்டமிட்டனர். காலை அல்லது மாலையில் வீட்டை சுற்றிவளைத்தால் மதன் தப்பித்து விடக் கூடும் என்பதால் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவில் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்தனர்.
போலீஸாரை கண்டதும் அங்கிருந்த பெண் பதற்றம் அடைந்தார். அவரிடம் மதன் பற்றி கேட்டபோது தெரியாது என கூறியுள்ளார். வீடு முழு வதும் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். வீட்டுக்குள் ரகசிய அறை ஒன்று இருப் பது தெரிந்தது. அங்கு பதுங்கியிருந்த மதனை கைது செய்துள்ளனர்.
தலைமறைவாக இருந்த மதன் மொட்டையடிப்பது, மீசையை எடுப்பது, தாடி வளர்ப்பது என அடிக்கடி கெட்டப்களை மாற்றி வந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் மதன் அடிக்கடி தொடர்புகொண்டது உறுதி செய்யப்பட்டது. வடபழனியைச் சேர்ந்த அந்தப் பெண்ணை போலீஸார் கண்டுபிடித்து தனி இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போதுதான் மதன் வாட்ஸ் அப்பை மட்டும் பயன்படுத்தியது உறுதியானது.