கறுப்பை வெள்ளையாக திருப்பிக் கொடுத்தால் சிக்கல் வருமா?

கறுப்பை வெள்ளையாக திருப்பிக் கொடுத்தால் சிக்கல் வருமா?
Updated on
3 min read

ஐநூறும்.. ஆயிரமும்... உங்கள் சந்தேகங்களுக்கு நிபுணர்கள் பதில் அளிக்கிறார்கள்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது மற்றும் கையில் இருக்கும் நோட்டுகளை வங்கியில் செலுத்துவது தொடர்பாக ‘தி இந்து உங்கள் குரலில்’ பொதுமக்கள் பதிவு செய்திருந்த சந்தேகங்களுக்கு தமிழ்நாடு முதன்மை வருமான வரித் துறை ஆணையர் (ஓய்வு) எஸ்.செந்தாமரைக் கண்ணன் தரும் பதில்கள் இங்கே..

கடன் தொகையை முழுமையாக செலுத்தலாமா?

மென்பொருள் துறையில் பணிபுரியும் நான் எனது சகோதரியின் திருமணத் துக்காக ரூ.4.5 லட்சம் தனிநபர் கடன் பெற்று, தவணை முறையில் திருப்பிச் செலுத்தி வருகிறேன். மீதித் தொகையை தற்போது முழுவதுமாக செலுத்தினால் வருமான வரி பிரச்சினை வருமா?

- முகமது தாஃபிக், சென்னை

உங்களுக்கு வேறு வருமானம் ஏதும் இல்லாத பட்சத்தில், மென்பொருள் நிறுவனம் உங்களுக்கு தந்த சம்பளத்துக்கு வருமான வரி பிடித்தம் செய்திருக்கும். வரி கட்டிய பிறகு சேமித்த வருமானத்தை தான் நீங்கள் அப்படியே முழுமையாக கடனை அடைக்கிறீர்கள் என்றால் எந்த கேள்வியும் எழாது. அதற்கு பதிலாக, வேறு யாரிடமாவது பணம் வாங்கி கடனை அடைக்கிறீர்கள் என்றால் அதற்கான ஆவணம் வைத்திருக்க வேண்டும். உங்களது நண்பர் உங்களுக்கு தரும் பணம் வரி கட்டிய பணமாக இருக்க வேண்டும். இல்லா விட்டால் அவருக்கு கேள்வி வரும்.

சீட்டு பணத்தை சேமிப்பில் போடலாமா?

என்னுடைய சேமிப்புக் கணக்கில் ரூ.1.50 லட்சம் ஆர்.டி.யாக வைத்துள்ளேன். தற்போது நான் சீட்டுப் போட்டு சேமித்து வைத்திருந்த ரூ.3 லட்சத்தை அதே வங்கிக் கணக்கில் சேமித்து வைக்கலாமா?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகர்

நமது வருமானத்தில் இருந்து தான் சீட்டுக்கு பணம் சேமிக்கிறோம். சீட்டு பணத்தை தாராளமாக வங்கியில் போடலாம். அதேசமயம், 20 லட்ச ரூபாய்க்கு சீட்டு கட்டி அதன் மூலம் ரூ.25 லட்சம் பெற்றிருந்தால் கூடுதலாக பெறப்பட்ட 5 லட்சம் வருமானமாக கருதப்படும். அதில் 2.5 லட்சம் போக எஞ்சிய தொகைக்கு வரி செலுத்த வேண்டும்.

2005-க்கு முந்தைய நோட்டுகளை மாற்றுவது எப்படி?

எனக்குத் தெரிந்த ஒருவர் 2005-ம் ஆண் டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளை நீண்ட நாட்களாக வீட்டிலேயே வைத்திருந்திருக்கிறார். அவர் கல்வியறிவு அற்றவர். தற்போது அஞ்சலகத்தில் கேட்டால் அந்த நோட்டுகளை மாற்றித் தர இயலாது என்கிறார்கள். இவற்றை மாற்ற என்ன வழி?

- பிரதீப், துறையூர்

2005-ம் ஆண்டுக்கு முன்பாக அச்சடிக்கப் பட்ட 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்கும் ஒரு திட்டம் இருந்தது உண்மை. ஆனால், அது அமலுக்கு வர வில்லை. எனவே, அத்தகைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என தபால் அலுவலகத்தில் சொன்னால் தவறு. சரியான புரிதல் இல்லாமல் தபால் அலுவலக ஊழியர்கள் மறுத்திருக்கலாம். எனவே, அவர்களது மேலதிகாரிகளை அணுகி இதற்கு தீர்வு காணலாம்.

பிளாட் விற்கும் பணத்தை வங்கியில் போடலாமா?

15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய எங்களது பிளாட்டை தற்போது விற்க எண்ணியுள்ளோம். அவ்வாறு விற்று கிடைக்கும் பணத்தை வங்கியில் செலுத்தினால் வருமான வரி பிடித்தம் செய்வார்களா?

- ஆர்.ரமேஷ், தரமணி

1. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரில் இருந்து 8 கிலோ மீட்டருக்கு அப்பால், 2. ஒரு லட்சத்தில் இருந்து பத்து லட்சத்துக்குள் மக்கள் வசிக்கும் நகரில் இருந்து 6 கிலோ மீட்டருக்கு அப்பால், 3. பத்தாயிரத்தில் இருந்து ஒரு லட்சத்துக்குள் மக்கள் வசிக்கும் நகராக இருந்தால் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் - இந்த 3 நிபந்தனைகளில் ஏதாவதொரு நிபந்தனைக்கு உட்பட்ட விவசாய நிலமாக இருந்தால் அதை விற்கும் பணத்துக்கு வருமான வரி இல்லை.

இந்த நிபந்தனைக்குள் வராத நிலமாகவோ, பிளாட்டாகவோ இருந்தால் வருமான வரி கட்ட வேண்டும். அவற்றை நீங்கள் வாங்கி 3 ஆண்டுகளுக்குள் விற்றிருந்தால் 30 சதவீதமும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு விற்றிருந்தால் 20 சதவீதமும் வருமான வரி செலுத்த வேண்டும். வழக்கமான வருமான வரி விதிப்பு வரம்புகள் இதற்கும் பொருந்தும்.

வட்டியை செலுத்துவது எப்படி?

எனது நண்பரிடம் வாங்கிய ரூ.8 லட்சம் கடனுக்கான 2 சதவீத வட்டியை மாதா மாதம் ரொக்கமாக கொடுத்து வருகிறேன். தற்போதைய சூழ்நிலையில் எவ்வாறு வட்டித் தொகையை செலுத்துவது. நான் நாணயமாக நடந்து கொள்ள நினைக்கிறேன்.

- கோவை வாசகர்

8 லட்ச ரூபாய் எப்படி வந்தது என்று உங்கள் நண்பர் தான் பயப்பட வேண்டும். நீங்கள் தரும் வட்டியும் நண்பருடைய வருமானமே. ஆண்டுக்கு நீங்கள் ரூ.1.60 லட்சம் மட்டுமே வட்டியாக கட்டுகிறீர்கள் என்பதால் உங்க ளுக்கு வருமான வரி கேள்வி வராது. இன்னொருவருக்கு கொடுக்கும் எந்த தொகையையும் முடிந்த வரை காசோலையாக கொடுத்து, வாங்க பழகிக் கொள்ளுங்கள். அதுதான் பாதுகாப்பானது, உத்தரவாதமானது.

வீட்டுக் கடன் தொகையை இன்னொரு கணக்கில் வரவு வைக்கலாமா?

ஹெச்.டி.எஃப்.சி. வங்கியில் வீட்டுக் கடனுக்காக பெற்ற காசோலையை எஸ்.பி.ஐ. வங்கியில் செலுத்தி ரொக்கமாக எடுத்து விட்டேன். 500, 1000 செல்லாது என சொன்ன பிறகு அந்தப் பணத்தை முழுவதுமாக வங்கியில் செலுத்தி விட்டேன். இதனால் ஏதும் பிரச்சினை வருமா?

- மீனாட்சிசுந்தரம், ஈரோடு

வீட்டுக் கடனுக்காக வாங்கப்பட்ட பணம் வருமானமாகாது. அதை அப்படியே நீங்கள் வங்கியில் செலுத்தி இருப்பதாக சொல்கிறீர் கள். நீங்கள் ஏற்கெனவே வங்கியில் இருந்து பெற்ற பணத்தை வேறு எதற்கும் செலவழிக் காத பட்சத்தில் உங்களது இந்த நடவடிக்கை குறித்து கேள்வி வராது. அப்படியே வந்தாலும் உரிய விளக்கத்தை சொன்னால் வருமான வரி துறையினர் ஏற்றுக் கொள்வார்கள்.

கறுப்பை வெள்ளையாக திருப்பிக் கொடுத்தால் சிக்கல் வருமா?

நான் நிறைய பேரிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளேன். அவர்கள் எனக்கு கொடுத்திருந்த தொகை அனைத் தும் கணக்கில் வராத கறுப்புப் பணம் என தெரி கிறது. ஆனால், நான் இவர்களுக்கு திரும்பக் கொடுக்கப் போவது வெள்ளை பணம். இதனால் எனக்கு ஏதும் பிரச்சினை வருமா?

- கோயம்புத்தூர் வாசகி

நீங்கள் லட்சக்கணக்கில் கடனாக பெற்ற பணத்தை என்ன செய்தீர்கள்? அதை வைத்து கணக்கில் வராமல் வருமானம் ஈட்டி இருந்தால் அதுவும் கறுப்புப் பணம் தான். கடன் வாங்கி நீங்கள் ஏதாவது தொழில் செய்திருந்தால் அதற்கான வருமானம் என்ன? வரி கட்டினீர்களா? என்ற கேள்விகள் வரலாம். வருமான வரித் துறை என்றாலே பயந்து நடுங்க வேண்டியதில்லை.

பெரும்பாலும் 98 சதவீத வருமான வரி தாக்கல் படிவங்களை வருமான வரித் துறையினர் அப்படியே ஏற்றுக்கொண்டு விடுவார்கள். மீதி 2 சதவீதத்தை மட்டுமே அவர்கள் மறு ஆய்வுக்கு எடுப்பார்கள். அவர்களது சந்தேகப் பார்வை எல்லாமே கோடிக் கணக்கில் வரவு செலவு செய்யும் நபர்களை நோக்கித் தான் இருக்குமே தவிர, சில லட்சங்களை வரவு - செலவு செய்யும் சாமானியர்களை எந்தத் தொந்தரவும் செய்யமாட்டார்கள். அப்படியே சாமானியர்களை கேள்வி கேட்டாலும் அதில் இருந்து சிக்கலின்றி வெளிவர வருமான வரி சட்டத்தில் நிறைய வழிகள் இருக்கின்றன.

(செந்தாமரைக் கண்ணனின் பதில்கள் நாளையும் தொடரும்)

தொகுப்பு: குள.சண்முகசுந்தரம்

நீங்கள் செய்யவேண்டியது... 044-42890012 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக்கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). எதிர்முனையிலிருந்து யாரும் பேச மாட்டார்கள். நீங்கள் கூற வேண்டிய கருத்துக்களைப் பதிவுக் குரலின் வழிகாட்டுதல்படி, பதிவு செய்யுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in