Published : 30 Sep 2022 09:57 PM
Last Updated : 30 Sep 2022 09:57 PM

தருமபுரி | ‘‘கலெக்டரம்மா என் வண்டியில் ஏறுங்கள்’’ - குறைதீர் கூட்டத்தில் விவசாயியின் வெள்ளந்தி பேச்சு

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (30-ம் தேதி) விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் சாந்தி இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பலரும் அடுத்தடுத்து தங்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த வரிசையில், மொரப்பூர் ஒன்றியம் எலவடை கிராமத்தைச் சேர்ந்த முதியவரான விவசாயி சின்னசாமி என்பவர் எழுந்து நின்று, ‘எங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் டிஏபி உரம் கேட்டு சென்றேன். டிஏபி உட்பட எந்த உரமும் இல்லை என்கிறார்கள். சுற்றுவட்டார பகுதிகளில் வாங்கச் செல்லலாம் என விசாரித்தபோது அங்கேயும் உரங்கள் இருப்பு இல்லை என தகவல் கிடைத்தது. விவசாய தேவைக்கு நாங்கள் உரத்துக்கு எங்கே அலைவது’ என ஆட்சியரிடம் கேட்டார்.

உடனே, மாவட்ட ஆட்சியர் கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர், வேளாண் துறை அதிகாரிகளின் பக்கம் பார்வையை திருப்பினார். அவர்கள், ‘‘மாவட்டத்தில் 125-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் டிஏபி உட்பட சுமார் 15 ஆயிரம் டன் உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய இருப்பில் வைக்கப்பட்டுள்ளது’’ என்றனர். இதைக்கேட்ட பின்னர் அந்த விவசாயியின் பக்கம் திரும்பிய ஆட்சியர், ‘அய்யா...அதிகாரிகளின் தகவலின்படி உரங்கள் போதிய அளவு இருப்பு இருப்பதாக தெரிகிறது. உங்களுக்கு மட்டும் ஏன் உரம் கிடைக்கவில்லை’ என்றார்.

உடனே அந்த விவசாயி, ‘கலெக்டரம்மா...நான் என்ன பொய்யா சொல்கிறேன். உங்களுக்கு நம்பிக்கையில்லை என்றால் என் வண்டியில் உட்காருங்கள் நேரில் அழைத்துச் செல்கிறேன். நீங்களே விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்’ என்றார்.

இதைக் கேட்ட ஆட்சியர் சாந்தி, ‘உங்க வண்டியில ஏறி வரட்டுமா அய்யா..’ என்று சிரித்துக் கொண்டே கேட்க, அரங்கத்தில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

பின்னர், உரம் பற்றிய அவரது பிரச்சினை குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்துக்கு இடையிலேயே அதிகாரிகள் போன் மூலம் விசாரணையில் இறங்கினர். சற்று நேரத்தில் அவர்கள் ஆட்சியரிடம் சில தகவல்களை தெரிவித்தனர்.

அந்த தகவல்களின் அடிப்படையில் மைக்கில் பேசிய ஆட்சியர், ‘உரம் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகள் உடனே விசாரணை நடத்தினர். உரம் போதிய அளவில் மாவட்டத்தில் இருப்பில் இருப்பது உண்மை. குறிப்பிட்ட அந்த கூட்டுறவு கடன் சங்கத்திலும் உரம் இருப்பு உள்ளது. ஆனாலும் விவசாயியிடம் உரம் இல்லை என ஏன் கூறி அனுப்பினார்கள் என்று விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வருகிறது’ என்றார்.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டங்களின்போது, மாவட்ட ஆட்சியர் சாந்தி விவசாயிகளிடம் மிக எளிய நடையிலும், இயல்பாகவும் பேசி கூட்டங்களை நடத்துகிறார். இதனால், கூட்டத்தில் பங்கேற்கும் கிராமப்புற அப்பாவி விவசாயிகள் பலரும் அவர்களது கிராமிய மொழியிலேயே தயக்கமும், அச்சமும் இல்லாமல் ஆட்சியரிடம் பேசுகின்றனர். இந்த இலகுவான சூழலால் ஒருசில விவசாயிகள் தங்கள் மனதில் பட்டதை வெள்ளந்தியாக பேசி கூட்டரங்கத்தை சிரிப்பலையில் ஆழ்த்தி விடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x