“ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை” - அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி | கோப்புப் படம்
அமைச்சர் பொன்முடி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஓசி பேருந்து என விளையாட்டாக பேசியதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்றும், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்றும் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, "பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் சுற்றில் கலந்துகொள்ள தகுதியுள்ள மாணவர்கள் 31 ஆயிரத்து 94 பேர். அதில் விருப்பப் பாடம் மற்றும் கல்லூரிகளை 23 ஆயிரத்து 458 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கல்லூரிக்கு சென்று சேர வேண்டிய மாணவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 153 பேர்.

3-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 13-ம் தேதி தொடங்கும். பொறியியல் கலந்தாய்வு 4 கட்டங்களாக நடைபெறும். பி.ஆர்க் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் அக்டோபர் 5-ம் தேதி வெளியிடப்படும். 8-ம் தேதி முதல் கலந்தாய்வு ஒரே கட்டமாக நடைபெறும். 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் இறுதியில் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும். நீட் தேர்வு போன்ற காரணங்களால் பொறியியல் கலந்தாய்வு மற்றும் வகுப்புகள் துவங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க அனைத்து முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். மாநிலக் கல்வி கொள்கை குழு அறிக்கை தாக்கல் செய்ய ஓராண்டு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஓசி பேருந்து பயணம் என விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டிய தேவையில்லை. கீழே மக்கள் பேசியதை நான் கலோக்கியலாக சொன்னதைத் தவறாக புரிந்துகொண்டனர்" என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in