Published : 30 Sep 2022 11:09 AM
Last Updated : 30 Sep 2022 11:09 AM

தேர்தலை எதிர்கொள்ளும் நாங்களும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றல்ல: திருமாவளவன் சாடல்

திருமாவளவன் | கோப்புப்படம்

சென்னை: "எங்களுக்கு முறைப்படி அனுமதி வழங்க வேண்டும். சட்டப்படி நாங்கள் பேரணி நடத்த விரும்புகிறோம். நாங்களும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றல்ல. நாங்கள் தேர்தலில் பங்கேற்கின்ற ஜனநாயக பூர்வமான அரசியல் கட்சிகள்" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை அசோக்நகரில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மனித சங்கிலிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு தடை விதித்திருப்பதை காரணம்காட்டி மனித சங்கிலிப் போராட்டத்துக்கும் அனுமதி மறுத்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை, சரியில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக சார்பில் நானும் காவல்துறை தலைமை இயக்குநரைச் சந்தித்து இதுதொடர்பாக முறையிட இருக்கிறோம். எங்களுக்கு முறைப்படி அனுமதி வழங்க வேண்டும். சட்டப்படி நாங்கள் பேரணி நடத்த விரும்புகிறோம்.

நாங்களும் ஆர்எஸ்எஸ் இயக்கமும் ஒன்றல்ல. நாங்கள் தேர்தலில் பங்கேற்கின்ற ஜனநாயகப்பூர்வமான அரசியல் கட்சிகள். ஆர்எஸ்எஸ் அடிப்படைவாதம் பேசுகிற, வெறுப்பு அரசியலை விதைக்கிற மதவெறி பாசிச அமைப்பு. எனவே அதையும் இதையும் முடிச்சுப்போட வேண்டாம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக, தமிழக அரசு நேற்று, மத்திய அரசால் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சூழலில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள நாளில், சில அமைப்புகள் சமய நல்லிணக்கப் பேரணி, மனித சங்கிலி நடத்த அனுமதி கோரியுள்ளன.

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க, போலீஸார் ரோந்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் ஊர்வலம் மற்றும் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்க இயலாது" என்று உத்தரவிட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x