சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Published on

மத்திய சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக தமிழக மாநிலப் பாடத்திட்டத்தையும், தேர்வு மதிப்பீட்டு முறையையும் மாற்ற வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

தமிழக மாநிலப் பாடத்திட்டத்தின் கல்வித்தரம், எந்த மதிப்பீட்டின் அடிப்படையில் பார்த்தாலும், மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது. தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுகள் அனைத்திலும் அதன் தேர்ச்சி சதவீதத் தில் கடைசி இடத்தில் தமிழகம் இருப்பதே இதற்கு சாட்சி.

தமிழகத்தில் இப்போது நடை முறையில் இருக்கும் மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 2005-06ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு கடந்த 12 ஆண்டுகளாக இப்பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி, சிபிஎஸ்இ பாடத்திட்டம் மாணவர்களின் சிந்திக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. தமிழக பாடத்திட்டமோ மனப்பாட முறையை ஊக்குவிப்பதாக இருக்கிறது.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தமிழகத்தில் குறைவாகவே இருந்தது. எனினும், அவர்கள் திறமை உடையவர்களாக இருந்தனர். காலப்போக்கில், தங்கள் ஆட்சியில்தான் பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துவிட்டதாக காட்டிக்கொள்வதற்காக, அதிமுக, திமுக அரசுகள் தேர்ச்சி விகிதத்தை செயற்கையாக அதிகரித்துக் காட்டின. கல்வித்தரம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

மாணவர்களைப் பாதுகாக்கவும், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு கல்வித்தரத்தை மேம்படுத்த வும் வசதியாக மத்திய சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக தமிழக மாநிலப் பாடத்திட்டத்தையும், தேர்வு மதிப்பீட்டு முறையையும் மாற்ற வேண்டும். இப்பணியை மேற்கொள்ள கல்வித்துறை வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in