Published : 30 Sep 2022 06:14 AM
Last Updated : 30 Sep 2022 06:14 AM

வாரிசு சான்றிதழ் பெற புதிய வழிகாட்டுதல்கள்: நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை வெளியிட்டது

சென்னை: சட்டப்படியான வாரிசு சான்றிதழ் பெறுவதற்கும், அதை வழங்குவதற்கும் புதிய வழிகாட்டுதல்களை, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வருவாய் நிர்வாக ஆணையருக்கு தமிழக வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் அனுப்பியுள்ள கடிதம்: சட்டப்படியான வாரிசுகளுக்கான வாரிசு சான்றிதழ்களை தாசில்தார் வழங்குவதற்கு, வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு இதை ஆய்வு செய்து, விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, இறந்தவர் வசித்த பகுதியில் உள்ள தாசில்தாரிடம், வாரிசு சான்றிதழ் கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவேளை, அவர் அந்த முகவரியில் 6 மாதத்துக்கும் குறைவாக வசித்திருந்தால், ஓராண்டுக்கு அதிகமாக வசித்த பகுதியின் தாசில்தாரிடம் இருந்து அறிக்கை பெற வேண்டும்.

இறந்தவர் திருமணம் ஆனவராக இருந்தால், அவரது தந்தை, தாய், துணை, மகன், மகளின் பெயர்கள் சான்றிதழில் இடம்பெறலாம். திருமணம் ஆகாதவராக இருந்தால், தந்தை, தாய், சகோதரர்கள், சகோதரிகளின் பெயர் இடம்பெறலாம். அதே நேரம், இறந்த ஒருவருக்காக வேறொருவர் சான்றிதழ் பெற வேண்டுமானால், இறப்பு சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு மேல் காணாத நிலையில் இறந்துவிட்டதாக சம்பந்தப்பட்ட நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு, இறந்தவரின் ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், வங்கி புத்தகம், ஓட்டுநர் உரிமம், பென்ஷன் உத்தரவு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல, இறந்தவருடனான உறவு தொடர்பாக, திருமண பதிவுச் சான்று, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்று, பள்ளி மாற்றுச்சான்று உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை அளிக்கலாம். ஒருவேளை, வயது வந்த வாரிசு இல்லாத பட்சத்தில் மைனர் வாரிசுக்காக பாதுகாவலர், சகோதரர், சகோதரி வாயிலாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இறந்தவர் குழந்தையை தத்தெடுத்திருந்தால், அவருக்கான வாரிசு சான்றிதழை வழங்குவதற்கு முன்பு, அவர் சட்டப்படி தத்தெடுக்கப்பட்டவரா என்பதை தாசில்தார் உறுதி செய்ய வேண்டும்.

சட்டப்படியான வாரிசு சான்றிதழில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், தாசில்தாரின் உத்தரவை எதிர்த்து வருவாய் கோட்டாட்சியரிடம் ஓராண்டுக்குள் முறையிட வேண்டும். அதற்கு மேல் மாவட்ட வருவாய்அதிகாரியிடம் முறையிடலாம்.

ஒரு வாரத்தில் சான்றிதழ்: வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆய்வுக்கு பிறகு, விண்ணப்பத்தை அவர்கள் தாசில்தாருக்கு பரிந்துரை செய்வார்கள். தாசில்தார் ஒருவாரத்துக்குள் சான்றிதழ் அளிக்கவேண்டும். தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதை கண்டறிந்தால் சான்றிதழை ரத்து செய்வதற்கும், அதை வழங்கிய அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x