

நாமக்கல்: அக்.2-ம் தேதி சமூக நல்லிணக்க பேரணி நடத்த நீதிமன்றத்தை நாட உள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
ராசிபுரத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: அக்.2-ம்் தேதி விசிக, இடதுசாரிகள் சார்பில் சமூக நல்லிணக்கப் பேரணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்பேரணி மற்றும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் நடத்தப் போவதாக அறிவித்த அணி வகுப்புக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு விதிக்கப்பட்ட தடை விசிக, இடதுசாரிகளுக்கு கிடைத்த வெற்றி. எனினும், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரிய 50 இடங்கள் போக மற்ற இடங்களில் விசிக, இடதுசாரிகள் நடத்தும் சமூக நல்லிணக்கப் பேரணிக்கு அனுமதியளிக்க வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாட உள்ளோம். காவல் துறை தலைமை இயக்குநரை அணுகி அனுமதி கேட்க உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.