

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாட முதுகலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சாந்திப்பிரியா. இவர், மாணவி ஒருவரிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொண்டதாகவும், வேதியியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்ததாகவும், பள்ளியில் பாடம்நடத்தாமல் குடும்ப விஷயங்களை பேசுவதாகவும் மாணவிகளிடையே புகார் எழுந்தது.
இதேபோல, மற்றொரு மாணவியை மருமகளே என்று அழைத்ததுடன், அவரது மகனிடம் பேசுமாறு கூறியதாகவும் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் மாணவிகளின் அலைபேசிக்கு தொடர்புகொண்டு, பாட விஷயமாக பேச வேண்டும் என்று சொல்வதும், பாடம் இல்லாத பிற விஷயங்களை பேசியதாகவும் புகார் எழுந்தது. மேலும், மாணவிகளை தவறுதலாக வழிநடத்தியதாகவும் புகார் கூறப்பட்டது.
18 வயதுக்கு குறைவான சிறார்களிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது, போக்சோ சட்டத்தின் கீழ் தவறு என்பதை அறிந்தே ஆசிரியை ஈடுபட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து தாராபுரம் கல்வி மாவட்ட அலுவலர் விசாரணை மேற்கொள்ள, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆசிரியை சாந்திப்பிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் அவரை பூலாங்கிணறு மேல்நிலைப் பள்ளிக்கு மாறுதல் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.