Published : 30 Sep 2022 06:09 AM
Last Updated : 30 Sep 2022 06:09 AM
கூடலூர்: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் செயல்பட வைப்பதாக, ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பாரத ஒற்றுமை நடைபணத்தை மேற்கொண்டுள்ள அவர் கேரள மாநிலத்தில் பயணத்தை முடித்துக் கொண்டு, மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு நேற்று வந்தார். அங்கு அவருக்கு பொதுமக்களும் காங்கிரஸாரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், பேருந்து நிலையப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இங்கு தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 3 மொழிகளை மக்கள் பேசுகின்றனர். 3 கலாச்சாரங்களும் உள்ளன. இங்கு ஒருவரை ஒருவர் மதிக்கின்றனர், பாசத்தோடு நடந்துகொள்கின்றனர். இந்திய ஒற்றுமை பயணம் ஆரம்பிக்கும்போது, இந்த கனவுதான் என்னிடம் இருந்தது. அதை இங்கு கண்கூடாக பார்க்கிறேன். 3 மொழிகள் பேசும் மக்கள் ஒற்றுமையாக உள்ளதுபோலதான், நாடு முழுவதும் ஒற்றுமை ஏற்பட வேண்டும். இங்கு யாரும் எந்த மொழியும் பேசக்கூடாது என சொல்வதில்லை. சில இயக்கங்கள் இங்கு அமைதியைக் குலைக்க, மக்களிடம் வெறுப்புணர்வை தூண்டுகின்றன.
இந்தியா என்ற நதியில் எந்த மொழியையும் பேசலாம், கலாச்சாரத்தை பின்பற்றலாம். யாரும் யாரையும் அவமதிக்கக்கூடாது. பிரிவினையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், அரசுகளுக்கு எதிராக ஆளுநர்களை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் செயல்பட வைக்கின்றன. இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆட்சியில் தலையிடுவது எந்த விதத்தில் நியாயம்.
விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் மக்களும், ஜிஎஸ்டியால் குறிப்பாக சிறு தொழில்முனைவோர், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர்களை சந்தித்தேன். மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி, எந்த விதத்தில் உதவியது என கேள்வி எழுப்பினேன். அவர்கள் அனைவரும் ஜிஎஸ்டி ஒரு பேரழிவு என்றனர். பண மதிப்பிழப்பு குறித்து கேட்டபோது, அதுவும் பேரிடர் என்றனர். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூடலூரில் ஒற்றுமை பயணத்தை நிறைவு செய்த ராகுல்காந்தி, நேற்று இரவு மார்னிங் ஸ்டார் பள்ளி வளாகத்தில் கேரவனில் தங்கினார். இன்று காலை (செப்.30) 6 மணிக்கு கூடலூரில் இருந்து கர்நாடகா மாநிலம் குண்டல்பேட்டை செல்கிறார். அங்கு காலை 8 மணிக்கு நடைபயணத்தை தொடர உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT