அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்க மறுத்த மூதாட்டி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்க மறுத்த மூதாட்டி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்
Updated on
1 min read

கோவையில் அரசுப் பேருந்தில் ஏறிய மூதாட்டி, மகளிருக்கான இலவச பயணச்சீட்டை வாங்க மறுத்து, நடத்துநருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

கோவை காந்திபுரத்தில் இருந்து கண்ணம்ம நாயக்கனூர் நோக்கி நேற்று காலை சென்ற அரசுப் பேருந்தில், மதுக்கரை குரும்பபாளையத்தைச் சேர்ந்த துளசியம்மாள்(70) பயணித்தார்.

மதுக்கரை மார்க்கெட் நிறுத்தத்தில் ஏறிய அவரிடம், நடத்துநர் வினீத்(28) மகளிருக்கான இலவச பயணச் சீட்டை வழங்கியுள்ளார். அதை வாங்க மறுத்த துளசியம்மாள், ‘எனக்கு இலவச பயணச்சீட்டு வேண்டாம், பாலத்துறைக்கு செல்ல வேண்டும்.

அதற்கான கட்டணத்தை பெற்றுக்கொண்டு டிக்கெட்டை கொடு’ என நடத்துநரிடம் கூறினார். அவரை சமாதானப்படுத்தி கட்டணமில்லா டிக்கெட்டை வழங்க நடத்துநர் முயற்சித்தார். ஆனால், மூதாட்டி தொடர்ந்து மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பாலத்துறை வந்தும் அவர் இறங்க மறுத்ததால் வேறு வழியின்றி கட்டணம் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டை நடத்துநர் வழங்கியுள்ளார். அதன் பின்னரே மூதாட்டி பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றார்.

இந்த நிகழ்வுகளை பேருந்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து, சமூகவலைதளத்தில் பதிவிட்டது வைரலாகியுள்ளது. சமீபத்தில் அமைச்சர் பொன்முடி, பெண்கள் ‘ஓசி’ டிக்கெட்டில் பயணிப்பதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in