Published : 30 Sep 2022 06:54 AM
Last Updated : 30 Sep 2022 06:54 AM
சென்னை: கருவிழிப்பதிவு அடிப்படையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டம் அக்டோபர் 15-ம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் சிலவற்றில் சோதனை அடிப்படையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.
தமிழகத்தில் 2.15 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் பொது விநியோகம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. பொது விநியோகம் கணினிமயமாக்கப்பட்ட பின், ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, நியாய விலைக்கடைகளில் விற்பனை முனைய இயந்திரம் வாயிலாக, விரல்ரேகை பதிவுசரிபார்க்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதில் விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதைப் பலமுறை சரி செய்த போதும் சிக்கல் தொடர்கிறது.
ஏற்கெனவே ஸ்மார்ட் குடும்ப அட்டையுடன் ஆதார் இணைப்பு இருப்பதால், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளது போல் கருவிழி அடிப்படையில் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் அர.சக்கரபாணி நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "அக்டோபர் 15-ம்தேதிக்குள் தமிழகத்தில் சில நியாயவிலைக் கடைகளில் கருவிழி அடிப்படையில் பொருட்களை வழங்கும் முறை தொடங்கப்படும். இது சாத்தியப்பட்டால் அனைத்து கடைகளிலும் கருவிழிப் பதிவு அடிப்படையில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT