Published : 30 Sep 2022 04:35 AM
Last Updated : 30 Sep 2022 04:35 AM

அழியும் தருவாயில் குமரி ஏ.வி.எம். கால்வாய்: தேர்தல் காலங்களில் நிரந்தர வாக்குறுதியாக மாறியது

நாகர்கோவில்

குமரியையும், கேரளாவையும் இணைக்கும் நீர்வழிப் போக்குவரத்து பாதையாக இருந்த வரலாற்று சிறப்பு மிக்க குமரி ஏ.வி.எம்.கால்வாய் பராமரிப்பின்றி அழியும் தருவாயில் உள்ளது. இக்கால்வாய் பராமரிப்பு என்பது தேர்தல்கால வாக்குறுதியாக மட்டும் உள்ளது.

மண்டைக்காட்டை சேர்ந்த வாசகர் குமார், இந்து தமிழ் திசையின் உங்கள் குரல் சேவை பகுதியில் கூறியிருப்பதாவது:

ஏ.வி.எம். கால்வாய் தற்போது தூர்ந்து போய் கழிவுகள் கொட்டும் பகுதியாக மாறி வருகிறது. ஒரு காலத்தில் கொல்லத்தில் இருந்து மண்டைக்காடு வரை நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்புக்கு இக்கால்வாய் பிரதானமாக விளங்கியது.

மண்டைக்காடு வரும் பக்தர்கள் முதலில்கடலில் நீராடி பின்னர் ஏ.வி.எம். கால்வாயில் குளிப்பார்கள். அதன் பின்னரே பகவதியம்மன் கோயிலுக்கு சென்று வழிபடுவார்கள்.

இக்கால்வாயில் மண்டைக்காட்டில் மட்டும் 8 இடங்களில் படித்துறைகள் இருந்தன. ஆனால், இப்போது கழிவுநீர் ஓடையாக , கழிவுகள் கொட்டும் மையமாக மாறிவிட்டது.

கேரளாவில் தொடங்கி குமரி மாவட்டம் வரையிலும் நீர்வழிப்பாதை என்பதற்கான அடையாளமே இல்லாமல் இக்கால்வாய் அழிந்துவிட்ட நிலையில், மண்டைக்காட்டில் மட்டும் தனது அடையாளத்தை இழக்காமல் உள்ளது. எனவே மண்டைக்காடு ஏவிஎம் கால்வாயை மாசற்ற கால்வாயாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஏவிஎம் கால்வாய் சீரமைக்கப்பட்டு நீர்வழிப் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும், சுற்றுலா படகு இயக்கப்படும் என்றும் ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர். கடந்த குமரி மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட இதே வாக்குறுதி ஓங்கி ஒலித்தது. ஆனால் தற்போது அதன் பேச்சே இல்லாமல் உள்ளது.

தமிழக அரசு 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏவிஎம் கால்வாயில் பூவாறில் இருந்து மீண்டும் நீர்வழி போக்குவரத்தை கொண்டுவந்து சுற்றுலா படகுகளை இயக்குவதற்கான கருத்துருவை பொதுப்பணித்துறை நீர்ஆதார பிரிவு மூலம் தயார் செய்தது. அதன் பின்னர் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கேரளாவில் இருந்து குமரிக்கும், குமரியில் இருந்து கேரளாவுக்கும் படகு மூலம் பொருட்கள் கொண்டு செல்ல இக்கால்வாயை சிறந்த வணிகவழி பாதையாக பயன்படுத்தியுள்ளனர். நாளடைவில் பூவாறுக்கு பின்னர் பல இடங்களில் கால்வாய் இருந்த அடையாளம் தெரியாமல் சிதைந்துள்ளது.

குளச்சல் முதல் மணவாளக்குறிச்சி வரை கடற்கரை பகுதியில் குடிநீருடன் கடல்நீர் புகாமல் தடுக்கும் வகையில் சிறந்த சுத்திகரிப்பு அரணாக இக்கால்வாய் உள்ளது.

ஏ.வி.எம். கால்வாயை சீரமைத்து மீண்டும் பழமை மாறால் நீர்வழி போக்குவரத்தை தொடங்கினால் வர்த்தகம் மட்டுமின்றி குமரி சுற்றுலா மேலும் சிறப்படையும். இது தேர்தல் நேர வாக்குறுதியாக மட்டும் இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x