

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை மீது தடையை மீறி ஏறிச் சென்று சுவாமியின் பாதத்துக்கு சிறப்பு பூஜை செய்த காட்சிகள், சமூக வலைதளத்தில் வெளியானதால் இளைஞருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலை மீது சுவாமியின் பாதம் உள்ளது. இந்த பாதத்துக்கு பக்தர் ஒருவர் பூஜை செய்து வழிபாடு நடத்திய காட்சிகள், சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
இதற்கு பக்தர்கள் தரப்பில் வரவேற்கும் நிலையில், அண்ணாமலை மீது ஏறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை மீறியதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுகுறித்து அவர்கள் கூறும் போது, “திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணா மலையின் உச்சியில், கார்த்திகை தீபத் திருவிழா நாளில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
அண்ணாமலை மீது ஏறிச் செல்பவர்கள், தீக்குச்சி களை பயன்படுத்துவதால், அண்ணா மலையில் உள்ள மரம் மற்றும் செடிகள் எரிந்து கடந்த காலங்களில் சேதமடைந்தன. இதனால் வன விலங்குகளும் பாதிக்கப்பட்டன.
இதன் எதிரொலியாக, அண்ணாமலை மீது ஏறிச் செல்வதற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தடையை மீறி அண்ணாமலை மீது பலர் ஏறி செல்வது தினசரி நிகழ்வாக உள்ளது.
அண்ணாமலையை கண்காணித்து பாதுகாக்க வேண்டிய வனத்துறையினர், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. அண்ணாமலை மற்றும் மூலிகைச் செடிகள், வன விலங்குகளை பாதுகாக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது குறித்து திருவண்ணாமலை வன அலுவலர் சீனிவாசன் கூறும் போது, “சமூக வலைதளத்தில் வெளியான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், திருவண்ணாமலை பே கோபுர தெருவில் வசிக்கும் முருகன்(30) என்பவர் மலை மீது தடையை மீறி ஏறிச் சென்றது தெரியவந்தது. அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி அண்ணாமலை மீது ஏறி செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அண்ணாமலை மீது ஏறி செல்லாமல் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளோம்” என்றார்.