புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கம் | போராட்டம் செய்வது நல்லதல்ல - ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை

புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கம் | போராட்டம் செய்வது நல்லதல்ல - ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக போராட்டம் செய்வது நல்லதல்ல என்றும் போராடக்கூடாது என்றும் ஆளுநர் தமிழிசை எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு நூலகங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய, துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று கலை மற்றும் பண்பாட்டுத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் இயக்குனர் கந்தன் பங்கேற்றார். அப்போது, நூலகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து முருங்கப்பாக்கம் மற்றும் வில்லியனூரில் உள்ள அரசு கிளை நூலகங்களை துணைநிலை ஆளுநர் பார்வையிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மின்துறை ஊழியர்களின் போராட்டம் குறித்தும் மின்தடையால் மக்கள் பாதிப்பு தொடர்பாக ஆளுநர் தமிழிசையிடம் கேட்டதற்கு, "போராட்டம் செய்வது சரியல்ல. போராட்டம் விரும்பத்தக்கதல்ல. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டம் சரியாக இருக்காது. மின்தடையை ஏற்படுத்துவது நல்லதல்ல. அவர்கள் தங்கள் பிரச்சினையை கோரிக்கையாக முன்வைக்கலாம். அரசு என்ன முடிவு எடுத்தாலும் மக்களுக்கான முடிவாகத்தான் இருக்கும். அதனால் மக்கள் பயனடைய போகிறார்கள். மக்களுக்கான செலவு குறைக்கப்பட உள்ளது. இதை மனதில் கொண்டு அரசு முடிவு எடுக்கிறது. அதனால் போராட்டம் செய்வது நல்லது அல்ல. போராடக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மின்துறை தனியார் மயமாக்கப்படவுள்ளது உண்மையா என்று கேட்டதற்கு, "தனியார்மயமாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று பதில் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in