திருப்பூர் | மாணவிகளை தவறுதலாக வழிநடத்தியதாக புகார்: அரசுப் பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் 

திருப்பூர் | மாணவிகளை தவறுதலாக வழிநடத்தியதாக புகார்: அரசுப் பள்ளி ஆசிரியை பணியிட மாற்றம் 
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவிகளை தவறுதலாக வழிநடத்தியதாக புகார் எழுந்ததை அடுத்து, அவரை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப்பாட முதுகலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சாந்திப்பிரியா. இவர் மீது மாணவிகள் பல்வேறு புகார்கள் அளித்ததைத் தொடர்ந்து, அவரை வேறு பள்ளிக்கு மாற்றி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மாணவி ஒருவரிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொண்டதாகவும், வேதியியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்ததாகவும், பள்ளியில் பாடம் நடத்தாமல், குடும்ப விஷயங்களை பேசுவதாகவும் மாணவிகள் மத்தியில் கணித ஆசிரியை சாந்திப்பிரியா மீது புகார் எழுந்தது.

அதேபோல், மற்றொரு மாணவியை மருமகளே என்று அழைத்ததுடன், அவரது மகனிடம் பேசச் சொல்லியதாகவும் கூறப்படுகிறது. இரவு நேரத்தில் மாணவிகளின் அலைபேசிக்கு தொடர்புகொண்டு, பாட விஷயமாக பேச வேண்டும் என்று சொல்வதும், பாடம் இல்லாத பிற விஷயங்களை பேசியதாகவும் மாணவிகள் மத்தியில் புகார் எழுந்தது. அதேபோல், மாணவிகளை தவறுதலாக வழிநடத்தியதாகவும் தெரிகிறது. இந்த செயல்பாடுகள், 18 வயதுக்கு குறைவான சிறார்களிடம் மேற்கொள்வது போக்சோ சட்டத்தின் கீழ் தவறு என்பதை அறிந்தே ஆசிரியை இதில் ஈடுபட்டிருப்பதாகவும் புகார் எழுந்தது.

தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதால், மாணவிகளின் பாதுகாப்புக்கும், பிற ஆசிரியர்கள் மீது பொய் புகார்கள் அளித்து வருவதால் பள்ளியின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன் பள்ளியில் அசாதாரண சூழல் ஏற்படும் என்று பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சமடைந்துள்ளனர்.

இந்த புகார்கள் தொடர்பாக, தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து, ஆசிரியை சாந்திப்பிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக, அந்த பள்ளியில் இருந்து உடனடியாக விடுவிக்கும்படியும், வேறொரு பள்ளிக்கு மாறுதல் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in