

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து வரி செலுத்தலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து சென்னையின் புறநகர்ப் பகுதி நகராட்சிகளில் மக்கள் ஆர்வத்துடன் வரி செலுத்தினர். இதன்மூலம் ஒரே நாளில் ரூ.2.14 கோடி வசூலானது.
நகராட்சிகளில் வீட்டு வரி, காலி மனை வரி, குடிநீர் வரி, தொழில் வரி, சொத்து வரி என பல்வேறு வரிகள் வசூலிக்கப்படுகிறது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, இந்த ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த பொதுமக்கள் அதை மாற்ற முடியாமல் அவதிப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் தவித்து வந்தனர். அதே நேரத்தில், வங்கிகளில் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நகராட்சிக ளுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம் போன்ற வற்றுக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகளை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதன் படி சென்னையின் புறநகர்ப் பகுதி களான தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், மறை மலை நகர், செங்கல்பட்டு, செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளில் உள்ள வரி வசூல் மையங்களில் நேற்று முன்தினம் வரி வசூல் நடந்தது.
அனைத்து நகராட்சிகளிலும் காலையில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வரி செலுத்தினர். இதற்காக கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கட்டண மையங்களிலும் கூட்டம் அலை மோதியது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 நகராட்சிகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடியே 14 லட்சம் வரி வசூலானது.
இதில் தாம்பரத்தில் ரூ.85 லட்சம், பல்லாவரம் ரூ.74 லட்சம், மறைமலை நகர் ரூ.32. 75 லட்சம், செங்கல்பட்டு ரூ.9.75 லட்சம், செம்பாக்கம் ரூ.4.40 லட்சம், பம்மலில் ரூ.7 லட்சம், அனகாபுத்தூர் ரூ.1.5 லட்சம், வசூலானது.
நாளை வரை செலுத்தலாம்
இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஒருவர் கூறும் போது, ‘‘நகராட்சி வரி செலுத்துபவர்களிடம் பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெறப்பட்டு வருகிறது. ஞாயிறு, திங்கள்கிழமைகளிலும் அந்த நோட்டுகளை கொடுத்து வரி செலுத்தலாம் . இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.