

அடையாறு டிஜிஎஸ் தினகரன் சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அடையாறு பாலம் அருகே நேற்று முன்தினம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த 4 மோட்டார் சைக்கிள் களை நிறுத்த முயற்சி செய்த போது, ஆய்வாளர் வனிதாவை தாக்கி விட்டு 4 பேரும் தப்பி விட்டனர்.
இந்நிலையில், நேற்று மாலையில் மீண்டும் அடையாறு பாலம் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் மோட்டார் சைக்கிளில் போட்டி போட்டு வந்தனர்.
போலீஸார் அவர்களை காரில் விரட்டிச்சென்று அடையாறு டிஜிஎஸ் தினகரன் சாலையில் வைத்து சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்கள் பெயர் விக்னேஷ், கிஷோர், பிரகாஷ், பிரின்ஸ் என்பதும் தெரிந்தது. 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஆய்வாளர் வனிதாவை தாக்கி விட்டு தப்பிச்சென்றதும் இதே 4 பேர்தான் என்பது தெரிய வந்தது.