

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தை தமிழக அரசு தவறாக பயன்படுத்துவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமியை நேற்று சந்தித்துவிட்டு வெளியே வந்த பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மனிதனை தீண்டத்தகாதவனாக நடத்தும் போக்கை மாற்ற வேண்டும் என்பதற்குத்தான் தீண்டாமைக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், அப்படிப்பட்ட சட்டத்தை தவறாக பயன்படுத்தி, மாற்று அரசியல் இயக்க தலைவர்களை கைது செய்து, மாற்று அரசியல் சிந்தனையே இருக்கக்கூடாது என ஏதேச்சதிகார மனப்பான்மையோடு தமிழக அரசு நடந்துகொண்டுள்ளது.
பாலாஜி உத்தம ராமசாமி என்ன பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். அதற்குரிய சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில அரசு, பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தி கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.
அரசே சட்டத்தை தவறாக பயன்படுத்தும் போக்கு, மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கிவிடும். ஆ.ராசா என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் நினைப்பார் என்றால், இதுதான் திமுகவின் சரிவின் தொடக்கம்.
இந்த சரிவிலிருந்து நீங்கள் ஒருபோதும் மீள முடியாது. பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடைசெய்யப்பட்டது வரவேற்புக்குரியது. தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் எதிர்காலத்தில் வருத்தத்துக்கு உரியவர்களாக மாறுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.