

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு வரும் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு முதல் தொன்றுதொட்டு நடைபெற்று வந்தது. அதனால்தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்குகிறது. அவ்வாறு நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு 2014 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அந்த விளையாட்டுக்கான தடையை நீக்கி, தொடர்ந்து நடத்திட மத்திய, மாநில அரசுகள் ஆக்கபூர்வமான, சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பது தான் உண்மை நிலை.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணையின் போது மனுவில் முரண்பாடுகள் உள்ளது என்றும், ஜல்லிக்கட்டு விளையாட்டு கொடூரமானது என்றும், இந்த விளையாட்டுக்கு பிறப்பித்த தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் கூறி மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதற்கு எடுக்கும் முயற்சியில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். அதாவது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்பதற்காக சரியான காரணத்தையும், தகுந்த விளக்கத்தையும் கொண்ட மனுவை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சட்டத்தின் அனுமதியைப் பெற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முக்கியமாக இப்பிரச்சனையில் மத்திய அரசு சட்ட ரீதியாக ஒரு கொள்கை முடிவை உடனடியாக எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் கொள்கை முடிவின் மீது நீதிமன்றம் தலையிடாது என்பதற்கு ஏற்கெனவே வெளியான நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள் உதாரணமாக அமைந்திருக்கிறது. எனவே மத்திய அரசு தற்போது நடைபெறும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமாகா சார்பாக தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வரும் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழகத்தின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டு விளையாட்டு பாதுகாப்பு அம்சங்களுடன், தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும். இதனை நிறைவேற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்'' என்று வாசன் கூறியுள்ளார்.