Published : 29 Sep 2022 06:37 AM
Last Updated : 29 Sep 2022 06:37 AM

குழந்தைகளுக்கு எதிரான குற்றம் குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: கனிமொழி எம்.பி., வலியுறுத்தல்

குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் இளைய ஆர்வலர்களை ஊக்குவித்தல் குறித்த கருத்தரங்கம், சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. இதில் கனிமொழி எம்.பி பங்கேற்று சிறப்புரையாற்றினார். படம்: பு.க.பிரவீன்

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கனிமொழி எம்.பி., வலியுறுத்தினார். குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் இளைய ஆர்வலர்களை ஊக்குவித்தல் குறித்த கருத்தரங்கம், சென்னை, சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. இந் நிகழ்வில் கனிமொழி, எம்.பி பேசியதாவது:

சமூக நீதியைப் பற்றி நாம் தொடர்ந்து பேசுகிறோம். இதில் குழந்தைகளை பெரும்பாலும் இணைப்பதில்லை. தற்போது குழந்தையை சரியாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது. அவ்வாறு குழந்தைகளை சுய மரியாதையோடு, கவுரவத்தோடு, சம உரிமையோடு நடத்துவதற்கு இந்தச் சமூகம் தன்னை தயார் செய்துகொள்ள வேண்டும்.அப்போது தான் அனைவருக்குமான சமூக நீதி உருவாகும். பாலியல் வன்கொடுமை அதிகரிக்க தொழில்நுட்பமே காரணம்என எளிதில் கூறிவிடலாம். முன்பெல்லாம் நடப்பதை வெளியில் கூறவே முடியாமல் குழந்தைகள் அடக்கி வைக்கப்படுவார்கள். இதனால் மனச்சோர்வோடு அவர்கள் வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இப்போதுதான் வெளிப்படையாக பல விஷயங்கள் தெரிய வருகின்றன.

இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூகம் வலியுறுத்துகிறது. அப்படிச் செய்தால் குடும்ப நிலை போன்றவற்றை எண்ணிபுகார் கொடுக்கக்கூட செல்ல மாட்டார்கள். அப்போது குழந்தைக்கான நியாயம் கிடைக்காது. எனவே, பிரச்சினையின் இரண்டு கோணங்களையும் சீர்தூக்கி சட்டங்களை இயற்ற வேண்டும். இளைஞர்களால் குழந்தைகளின் பிரச்சினைகளை எளிதில் உரையாடி புரிந்து கொள்ள முடியும். அவர்களை குழந்தைகள் எளிதில் நம்புவார்கள். எனவே, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நாக்பூர், மகாராஷ்டிரா தேசியசட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயேந்திர குமார் பேசும்போது, "பொருளாதார, சமூகரீதியாக நெருக்கடியில் இருக்கும் பெற்றோர் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்காமல் பள்ளிக்கு அனுப்பும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார். இந்நிகழ்வில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் கே.ரத்னகுமார், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் பி.மாதவ சோமசுந்தரம், தோழமை அமைப்பின் இயக்குநர் ஏ.தேவநேயன், திறந்தநிலை பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர்கள் எஸ்.அனந்தராம கிருஷ்ணன், பி.அனுபமா தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x