Published : 29 Sep 2022 06:50 AM
Last Updated : 29 Sep 2022 06:50 AM

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி: அரசு மருத்துவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம்

சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் குடும்பத்தினருடன் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 118 மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனாலும், அவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்நிலையில், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வந்து தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்.

சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “உயிரைக் காக்கும் பணியைச் செய்கின்ற அரசு மருத்துவர்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். தமிழக அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள், மீனவர்கள் போராடுகின்றனர். ஆனால், சிறப்பான ஆட்சியைத் தருவதாக ஆட்சியாளர்கள் சொல்கின்றனர்” என்றார்.

வி.கே.சசிகலா வெளியிட்டஅறிக்கையில், "அரசு மருத்துவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு உண்ணாவிரதம் இருக்கின்ற சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவப் பணி தொழில் அல்ல; ஒரு சேவை. மருத்துவர்கள் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், தங்களுடைய குடும்பத்தைக் கூட கவனிக்க நேரமில்லாமல் எத்தனையோ பேரின் உயிரைக் காப்பாற்றும் புனிதமான பணியைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களைப் போராட வைத்து, வேடிக்கை பார்ப்பது நியாயமில்லை. அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:

அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தன் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ற அரசு வேலை தரப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நேரில் வந்து ஆதரவு தெரிவித்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், என் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, ‘இது தந்தையின் ஆணை. தந்தையின் ஆணையை நிறைவேற்றுவது தான் மகனின் கடமை' எனத் தெரிவித்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம்வர வேண்டும் என ஒவ்வொரு மருத்துவரும் விரும்பினோம். ஆகவே அனைவருமே குடும்பத்தினருடன் திமுகவுக்கு வாக்களித்தோம். எதிர்பார்த்தது போலவே திமுக ஆட்சி அமைந்தது. ஆனால்,அரசாணை 354-ஐ அமல்படுத்த மாட்டோம். சிறு தொகையை மட்டுமே தருவோம். அதுவும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்குத் தரமாட்டோம் எனத் தெரிவிக்கின்றனர். முதல்வர் தனது தந்தையின் ஆணையை நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x