Published : 29 Sep 2022 07:42 AM
Last Updated : 29 Sep 2022 07:42 AM
சென்னை: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கஉயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தைத்தான் திருமாவளவன் நாட முடியும் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் சார்பில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி தினத்தன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது. அக்.2-ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்தப்படவுள்ள நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை திரும்பப் பெற வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி திருமாவளவன் தரப்பில் செய்யப்பட்ட முறையீட்டை தனி நீதிபதியும், பொறுப்பு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வும் நேற்று முன்தினம் நிராகரித்தது. இந்நிலையில் திருமாவளவனின் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர் என்ஜிஆர்.பிரசாத், பொறுப்பு தலைமை நீதிபதிடி.ராஜா மற்றும் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று முறையிட்டார். அப்போது நீதிபதிகள், இந்த கோரிக்கை தொடர்பாக மனுதாரர் உச்ச நீதிமன்றத்தைத்தான் அணுக முடியும் என கருத்து தெரிவித்து முறையீட்டை ஏற்க மறுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT